Home  |
Jobs  |
IT Services |
Matrimony |
Nri News |
Cookery |
Modeling |
Friends |
Ecards |
 Tamil

முழுமையான ஆரோக்கியத்திற்கு தேவை மன நலமே!

முழுமையான ஆரோக்கியம் என்பது உடளலவில், மனதளவில், சமுதாய அளவில், ஆன்ம அளவில் நலமாக உணர்வதுதான். உடல் நலம் சமுதாய நலம் மற்றும் ஆன்ம நலத்திற்கு ஆதாரமாக இருப்பது மன நலமே. ஏனென்றால் மனத்தைக் கொண்டு தான் நாம் மனம் உட்பட எல்லாவற்றையும் அறிந்துக் கொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் முடியும். மனம் வளமாக இருந்தால் தான் மற்ற மூன்று நலன்களையும் நாம் பெற முடியும். அது எப்படி மனம் எல்லா நலன்களுக்கும் காரணமா இருக்க முடியும் நீங்கள் கேட்கலாம். உடல் நலத்தை எடுத்துக் கொள்வோம். உடலில் தோன்றும் நோய்கள் உடல் உறுப்புகளின் பாதிப்பினால் தான் ஏற்படுகிறது என்றாலும் அதற்கு மூலகாரணமாக இருப்பது மனம் தான் மனத்தில் தோன்றும் பயம், கோபம், ஆத்திரம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களே பெரும்பாலான நோய்களுக்கு காரணம் என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனத்தில் ஏற்படும் அழுத்தம், பதட்டம், உளைச்சல் போன்றவைகள் தான் பல நோய்களை உண்டு செய்வதாக இவ்வாராய்ச்சிகள் எல்லாம் தெரிவிக்கின்றன. எண்ணங்கள் எப்படி உடலை பாதிக்கும் என்று உங்களுக்கு தோன்றலாம். எண்ணங்கள் உடலில் ஏற்படும் உடலியல் ரசாயன மாற்றங்களை உடலின் நரம்பியல் செயல்பாட்டையும் தெரிந்து கொள்வதின் மூலம் இதை நாம் புரிந்து கொள்ளலாம். நாம் பயமுறுத்தும் சூழலிலும், கவலையான சூழலிலும் சிக்கியிருக்கும் போது அப்பிரச்சனையை எதிர் கொள்ளவோ அல்லது அதிலிருந்து தப்பிக்கவோ நினைப்போம். அம்மாதிரி சமயங்களில் நம் உடலுக்கு அதிகமான சக்தி தேவைப்படும். இதற்கு உதவி செய்வது தான் நம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் இதன் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம் நம் மூளையின் ஹைப்போதாளமஸ் மூலம் அட்ரினலின் ஹார்மோன்களையும் கார்டிசால் ஸ்டீராய்ட்டையும் சுரக்கச் செய்கிறது. இவை இரண்டும் இரத்தத்தில் கலந்து உடலின் பல இயக்கங்களையும் முடுக்கி விடுகிறது. இதய துடிப்பு அதிகரிப்பது, மூச்சு வேகமாவது, உடலின் தசைகள் சுருங்குவது, கை கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பது, உடலின் சூடு அதிகரிப்பது, விழியில் கண்மணிகள் விரிந்து விடுவது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பு அதிகரிப்பது போன்றவைகள் இதனால் ஏற்படுகிறது. அதே நேரத்தில் உடலின் மற்ற இயக்கங்களான ஜீரண மண்டல இயக்கம், சிறுநீரக இயக்கம் போன்றவைகள் குறைந்துவிடும். பிறகு ஆபத்து நீங்கி விட்டதாக மனம் உணர்த்தும் பாராசிம்பதடிக் சிஸ்டம் உடலின் முடுக்கி விடப்பட்ட இயக்கங்களை எல்லாம் பழைய நிலைக்கு கொண்டு வந்து விடும். இதைபோல மனம் அடிக்கடி தான் ஆபத்தில் இருப்பதாக நினைக்க தொடங்கி விட்டால் மேற்குறிப்பிட்ட உடல் செயல்பாடுகளும் தொடங்கி விடும் இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, இரத்த கொழுப்பு அதிகரித்து விடுவது, பசி, தாகம் குறைந்துவிடுவது போன்றவைகளுடன் மலச்சிக்கல், தூக்கம் இல்லாமை, தலைவலி போன்ற அறிகுறிகளும் அடிக்கடி ஏற்பட துவங்கும். இதுவே பின்பு இதய ரத்த குழாய் அடைப்பு, நீரிழிவு, குடலில் அல்சர், மூலம், மாதவிடாய் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு காரணமாகிறது. எனவே எண்ணங்கள் உடலில் எத்தனை விதமான ரசாயன மாற்றங்களை தொடர் சங்கிலி போல் ஏற்படுத்துகிறது என்பது புரிகிறது அல்லவா? மேலும் எண்ணங்கள் தான் பெருபான்மையான நோய்களுக்கு காரணமாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது அல்லவா?


M.Vimalatharani M.sc(couns&psyc),MD(acu),DHBM

psychotherapist

Clinic : Kavia Health Home

Vasantham colony, 18th main rd,

Anna nagar, Ch-40.


Back to Health Home


© Copyright 2014 All Rights Reserved vvonline.in