Home  |
Jobs  |
IT Services |
Matrimony |
Nri News |
Cookery |
Modeling |
Friends |
Ecards |
 Tamil

மாமருந்தான மனதை பண்படுத்துவது எப்படி?

உடல், மன, சமுதாய, ஆன்ம நலனை அளிக்ககூடிய ஒரே மருந்து மனம் தான். நோய் தீர்க்கும் மருந்துக்கென்று சில குணங்கள் உண்டு. அதாவது நோயை விட மருந்து வீரியமிக்கதாக இருக்க வேண்டும். கெட்ட விளைவுகளோ, பக்க விளைகளோ இல்லாததாக இருக்க வேண்டும் உபயோகிக்க எளிதாகவும் தேவைக்கேற்ப கிடைக்ககூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும் இப்படிப்பட்ட மாமருந்தான மனதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

1. மனதின் வீரியத்தை அதிகப்படுத்தும் தியானம்: ”மனதை அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்.” எனவே மனதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு பொருளைப்பற்றி நாம் அறிந்துக்கொள்ளவேண்டும் என்றால் என்ன செய்வோம். அந்த பொருளின் மேல் நம் கவனத்தை திருப்புவோம் அல்லவா! அதை போல் நம் மனதை கவனிக்கும் ஒரு பயிற்சி தான் தியானம். தியானத்தின் மூலம் நம் மனதை கவனிக்க ஆரம்பித்தவுடன் மனதின் இயக்கம் குறைந்து மனம் வலிமையடையும். மனதை ஒருமுகப்படுத்துவதால் மனதின் வீரியமும் அதிகரிக்கும். ஏனென்றால் தியானத்தின் போது மனம் நம் உள் நோக்கி குவிகிறது. உடலின் முக்கிய சக்கரங்களாகிய ஆக்கினை போன்றவையின் மீதோ, ஏதாவது ஒரு மந்திரச் சொல்லின் மீதோ, நம்முடைய மூச்சின் மீதோ அல்லது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தோன்றும் உணர்வுகளை கவனிப்பதின் மூலமோ மனதின் மொத்த இயக்கத்தையும் அதன் மேல் குவிக்கிறோம். இவ்வாறு குவியும் மனம் வலிமையடைவதுடன் தன்னை முழுமையாய் அறிந்து கொள்ளவும் வழிவகுக்கிறது.

2. மனம் குழந்தையை போல் இருக்க வேண்டும் : குழந்தைகள் வளரும் காலத்தில் எந்த கவலையோ, சுமையோ இன்றி இருக்கும். எல்லவற்றையும் கற்றுக்கொள்ள விரும்பும், புதிதுபுதிதாய் அனுபவிக்க நினைக்கும் ஏற்பு தன்மையுடன் இருக்கும். அது போல் தான் நாமும் கவலை, சுமைகள் ஏதுமின்றி மனதை காலியாக வைத்திருக்க வேண்டும். புதிதாய் கற்றுக்கொள்ளவும், வெளியிலிருந்து கிடைக்கும் அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும தயாராய் இருக்க வேண்டும். கடந்த காலத்தை மறந்து விட்டு எதிர் காலத்தை நினைத்து பயப்படாமல் நிகழ்காலத்தை நிறைவாய் வாழவேண்டும். ஒரு உயிரை படைக்கும் முன்பே இயற்கை அவ்வுயிருக்கு தேவையானதை படைத்து விடுகிறது. எனவே நம் தேவைக்கான எல்லாமே உலகில் இருக்கிறது. அதையெல்லாம் நல்ல முறையில் அனுபவிக்க மனம் தான் வேண்டும். இந்த பிரபஞ்சத்தின் எல்லா வளங்களும் எனக்கு தான் என்று நினைத்து வாழ்ந்தால் நிறைவான வாழ்க்கை வாழ முடியும்.

3. மனம் நேர்மறையான எண்ணங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்: மனதில் தோன்றும் எதிமறையான எண்ணங்களை மாற்ற முடியவில்லை என்று புலம்புவார்கள் வேண்டாதவை மாற்ற வேண்டும், அகற்ற வேண்டும் என்று நினைத்தால் தானே கஷ்டம். வேண்டியதை கொண்டு வந்தால் வேண்டாதது தானாய் மறந்து விடும். ஒரு அறை இருட்டாக இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். இருட்டை போக்க வேண்டும். என்ன செய்யவோம்? ஒரு ஸ்விட்சை போட்டவுடன் மின்சார விளக்கு அறை முழுவதையும் வெளிச்சமாக்கி இருட்டை போக்கிவிடும். மின்சாரம் இல்லை ஆனால் நம்மிடம் சில மெழுகுவர்த்திகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஓர் மெழுகுவர்த்தியை எற்றி வைத்தவுடன் அதை சுற்றியுள்ள இடம் வெளிச்சமாகி விடும். இவ்வாறு ஆங்காங்கு கொஞ்சகொஞ்சமாக விளக்கை ஏற்றியவுடன் அறை முழுவதும் வெளிச்சமாகிவிடும் இதை போலத் தான் ஞானம். நொடிப்பொழுதிலும் ஏற்படலாம் அல்லது நம் முயற்சியினால் கொஞ்சம் கொஞ்சமாகவும் கிடைக்கலாம். ஆனால் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்கவும், ஏற்றுகொள்ளவும் பழக வேண்டும். ஒரு மனிதரையோ, சூழ்நிலையையோ, பொருளையோ, மன்னிப்பது என்பது அவற்றை ஏற்றுக்கொள்வதின் மூலம் தான் சாத்தியமாகும். மனிதர்களையும், சூழ்நிலைகளையும், மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள பழகி கொண்டாலே பெரும்பாலான எதிர்மறை எண்ணங்கள் மறைந்து விடும். பின்பு என்ன? மனம் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வளமாகவும் மாறிவிடும். வளமான மனம் இருந்தால் உடல் நலம் முதலான எல்லா நலங்களும் தானாவே வந்து விடும்.


M.Vimalatharani M.sc(couns&psyc),MD(acu),DHBM

psychotherapist

Clinic : Kavia Health Home

Vasantham colony, 18th main rd,

Anna nagar, Ch-40.


Back to Health Home


© Copyright 2014 All Rights Reserved vvonline.in