தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? 👆இந்த வரிகளுக்குச் சொந்தக்காரனை எத்தனை இளைய தலைமுறையினர் அறிவர்? காவியக் கவிஞன் கம்பன், காப்பியக் கவிஞன் இளங்கோ மற்றும் ஞானக்கவி வள்ளுவன் வழியில் விடுதலைக் கவிஞன் பாரதியை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒப்பற்ற மேடை நாடகம் தான் பாரதி யார்? SB கிரியேஷன்ஸ் SBS இராமன்🌺 இயக்கத்தில், இசைக்கவி ரமணனின் 💐அசாத்திய நடிப்பில் உருவான அற்புதமான காவியம் ❤️பாரதியார் நாடகம் என்றால், பார்த்தவர்கள் மறுக்க மாட்டார்கள்! இது ஏதோ பொழுதுபோக்கு நிகழ்ச்சியோ, அல்லது சிலமணி நேர சிரிப்பு நிகழ்ச்சியோ அல்ல! இருந்தும், தன்னுடைய வசனத்தாலும், நடிப்பாலும், உணர்ச்சியாலும், பார்வையாளர்களைக் கட்டிப் போடுகிறார் வாழும் பாரதியான இசைக்கவி ரமணன் அவர்கள்! இசைக்கவி பாரதிக்கு உயிர் கொடுத்தால், குழுவினரோ, உடலாக இருந்து நம் முன்னே பாரதியை உயிர்ப்பிக்கிறார்கள் என்றால் மிகையல்ல!👍 பொதிகையில் இருந்து தென்றலை, கங்கைக்குக் கூட்டிச் செல்வதாக இருக்கட்டும்; அங்கே, காசி மாநகரில் பாரதியைச் சந்திக்கும் எட்டயபுர மகாராணி மற்றும் அரசுகவி திரும்ப எட்டயபுரத்திற்கே அழைக்கும் நிகழ்வாகட்டும்; எட்வர்டு மகாராஜாவோடு நம்நாட்டு ஏழைகளை ஒப்பிட்டு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லும் உயரமான வார்த்தைகளில் இசைக்கவி.... சாரி.... பாரதி, நம் உதிரத்தைத் தொட்டு விடுகிறார்!💐 சகோதரி நிவேதிதா சந்திப்பு, பாரதியைப் பெண்மையின் பக்கம் திருப்பியது என்ற வரலாற்று உண்மை புரிகிறது. எட்டயபுரம் திரும்பும் பாரதியை வரவேற்கும் செல்லம்மா மற்றும் தோழியர், செல்லம்மா தன் புதிய வரவை பாரதிக்கு உணர்த்தும் பாங்கில், சகோதரி தர்மா செல்லம்மாவாக நம் இதயத்தில் சொல்லாமலேயே நுழைந்து விடுகிறார். காட்சிகளின் நடுவே வரும் பாரதியார் பாடல்கள், நம்மை அந்த சரித்திர நாயகனோடு பயணிக்க வைக்கிறது என்பதே என் அனுபவ உண்மை!🙌 அடிமைத் தனத்தை மனதாலும் விரும்பாத பாரதியின் உள்ளத்தில்தான் எத்தனை கனல்கள்! அப்பப்பா .... சொல்லி மாளாது! அத்துனையும் அவனை அன்னை பராசக்தியின்.... இல்லை....இல்லை ....பாரத மாதாவின் அவதார புருஷனாகக் காட்டுகிறது! வித்தை அறிந்தவன் யார் முன்னும் கூனக்கூடாது என்பதும், பராசக்தி, உனக்கு அறிவில்லையா? என்று கேட்பதும், தான் எழுதிய கவிதைக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது என்பதும், (செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்துபாயுது காதினலே..... பாடல்) பாரதியின் பலப்பல பரிமாணங்களை நமக்குக் கண்முன்னே கொண்டு வருகிறது!👌 சிறைச்சாலையில் இருக்கும் வ.உ.சி மற்றும் சுப்ரமண்ய சிவாவைச் சந்திக்கும் காட்சியில் என்னையும மீறி என் கண்களில் பனித்த நீரில், கவிஞனின் உள்ளத்தைக் கண்டேன் பாரதிக்கு அரவிந்தரோடு இருந்த நட்பு, இருவரின் சம்பாஷனைகள், புதுச்சேரி வாழ்வு, மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் கொடுமைகள் என ஒவ்வொரு நிகழ்வையும் அட்சரம் பிசகாமல் காட்சிப் படுத்திய விதம், கண்களை விட்டு இன்னமும் அகலவில்லை!👍 எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்.... கண்ணன்.....அதாங்க.... குவளைக் கண்ணனாக நடித்தவரின் நடிப்பு அபாரம்👏. சென்னையில் இந்தியா பத்திரிகைக்க எழுதுவது, தன் பாடல்கள் அனைவராலும் பாடப்பட வேண்டும் என நினைப்பது, இந்தியா எப்படியும் விடுதலை அடைந்து விடும் எனத் தீவிர நம்பிக்கையில் ஆடுவோமே... பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ..... எனப் பாடுவது, திரும்பக் கடையம் - சென்னை - சிறை வாசம் - விடுதலை - உடல்நலம் குன்றுதல் - வறுமை என வரலாற்றின் பக்கங்களை நமக்கு ஊட்டிக் கடைசியாக, நான் இல்லாட்டாலும் என் கவிதை காலத்தைத் தாண்டி நிற்கும் செல்லம்மா.... என உணர்ச்சி பொங்கக் கூறுவது எனத் தொடக்கம் முதல் முடிவு வரை பாரதியாகவே வாழ்ந்த இசைக்கவியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவசியம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய மேடை நாடகம் பாரதி யார்? கேள்வியோடு தொடங்கி வேள்வியாக முடியும் நாடகத்தை உங்கள் ஊரிலோ அருகாமையிலோ நடந்தால், அவசியம் காணுங்கள்! தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா கண்ணீரால் வளர்த்தோம்! - எனும் பாரதியின் வரிகளை தேசநலன் கருதி மீண்டும் சுவாசிக்க வேண்டிய நிர்பந்தத்தை இசைக்கவி உணர்த்தி இருக்கிறார்! வாழ்த்துகள் அண்ணா!! Venkateswaran Anantaramaseshan Taruvai (Isaikkavi Ramanan) - சுரேஜமீ 25-6-2018