மே 4, துபாய்: திரு. சாலமன் பாப்பையா தலைமையில் அமீரக தமிழ் பேச்சாளர்களுடன் திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் அவ கலந்து கொண்ட பட்டிமன்ற நிகழ்ச்சி மே 2, வியாழனன்று, துபாய் ஜூமேய்ராவிலுள்ள எமிரேட்ஸ் தியேட்டரில் மாலை 7 மணி முதல் 11 மணி வரை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடனும் மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் நடந்து முடிந்தது. இது அமீரகத்தில் பல வருடங்களுக்கு பின் பிரபலங்கள் பங்கு பெறும் தமிழ் பட்டிமன்ற நிகழ்ச்சி ஆகும். எனவே மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் பெரும் திரளாக வந்து ரசித்து மகிழ்ந்தனர். தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த மூவரும் பட்டிமன்ற மேடையில் பார்வையாளர்களின் மனதை சிறப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் கொள்ளை கொண்டனர். இவர்களுடன், பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாய் அறிமுக பேச்சாளர்கள் பாலாஜி பாஸ்கரன் மற்றும் காயத்ரி ரங்கசுவாமியும், அனுபவமுள்ள பேச்சுத்திறன் கொண்ட சசிகுமார் மற்றும் சௌமியா விமல் நால்வரும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். சிறுமிகள் ஆஃபினா, அஞ்சனா, அனன்யா, இவர்களின் பாடல்களும், ப்ரீத்தி குழுவினரின நடனமும், அர்விந்த் பாரதியின் பல குரல் திறமை நிகழ்ச்சியும் சிறப்பு விருந்தினர் முதல் அனைவரையும் வியக்க வைத்தது. என்.எம்.சி மருத்துவமனை, பெட்ரோகோட் நிறுவனம் அமீரக தமிழ் பண்பலை 89.4, பெருமாள் கடை, மற்றும் பலர் அளித்த சிறப்பான உறுதுணையுடன் பண்பலை அறிவிப்பாளர் மயில் தொகுத்து வழங்க, நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவர்க்கும் மனமார நன்றி தெரிவிப்பதாக ரிதம் ஈவண்ட்ஸ், சௌமியா விமல், மற்றும் ஷானவாஸ் சார்பாக ஏற்பாட்டாளர் ரமா மலர் தெரிவித்தார்.

:துபாயிலிருந்து கமால் பாஷா