ஐ.நா.வின் தோற்றமும் செயற்பாடுகளும் -Part 3

Image



சான் பிரான்சிஸ்கோ மாநாடு

ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு தோற்றம் பெற்றது என்ற வரலாறு தொடர்பாக கடந்த வாரம் பார்த்தோம். 1941-1945 வரை ஐ.நா. சாசனம் ஒன்றை நிர்மானிப்பதற்காக எடுக்கப்பட்ட கடும் முயற்சியின் பலனாக 1945-ல் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இந்நிகழ்விற்கு முதலில் ஆதரவு வழங்கிய நான்கு நாடுகள் உட்பட 46 நாடுகள் இவ்வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டன. அதன் பின்னர் மேலும் நான்கு அரசுகளை இணைத்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டு பைலோருஷியன் சோவியத் சோசலிச குடியரசு( Byelorussian Soviet Socialist Republic), உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு (Ukrainian Soviet Socialist Republic), புதிதாக விடுதலையடைந்த டென்மார்க் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு கண்டம், இனம், மதம் என்பவற்றை பிரதிநிதிவப்படுத்தும் வகையில், உலக சனத்தொகையில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் ஐம்பது நாடுகளில் இருந்து கோல்டன் கேட் நகரில் கூடி வந்தார்கள். இவர்கள் இம்மாநாட்டில் மூலம் உலகத்தில் சமாதானத்தை கட்டி எழுப்பும் நோக்கோடு, ஒரு புதிய நம்பிக்கையோடு அமைதியைக் காத்து, சிறந்த உலகத்தை உருவாக்க உதவும் ஒரு அமைப்பை அமைக்க ஒன்றுகூடியது மிகவும் பாராட்டுக்குரியது என்றால் அது மிகையாகாது. வாஷிங்டன் , D . C யில் தீர்மானிக்கப்பட்ட Dumbarton Oaks திட்டத்தை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சி நிரலில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சாசனம் தயாரிக்கப்பட்டது.

அலையென திரண்ட கூட்டம்

வரலாற்று சிறப்பு மிக்க இம்மாநாட்டில் 850 பிரதிநிதிகள், ஆலோசகர்கள் மற்றும் பணியாளர்கள் என 3500 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதைவிட 2500 க்கு

மேற்பட்ட ஊடகங்கள், பார்வையாளர்கள் என அலைமோத, அப்போது வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய சர்வதேச கூட்டமாக இது அமைந்தது. பிரிட்டனின் அந்தோணி ஈடன்,( Anthony Eden) அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்டெட்டினியஸ்(Edward Stettinius), சீனாவின் டி. வி. சூங்(T. V. Soong), மற்றும் சோவியத் யூனியனின் வியாசஸ்லாவ் மோலோடோவ்(Vyacheslav Molotov) ஆகியோர் இக்கூட்டத்திற்கு சுழற்சி முறையில் தலைமை தாங்கியது சிறப்பம்சமாகும். அத்துடன் வாக்களிக்கும் நடைமுறை மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டு பின்பற்றப்பட்டதுடன், சாசனத்தின் ஒவ்வொரு பகுதியும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது இங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உயரிய சிறப்புமிக்க பணி இரண்டு மாதங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

சாசனத்தின் நான்கு பிரிவுகள்

இம்மாநாட்டிக்கு வருகை தந்திருந்த குழுவில் இருந்து கொள்கைகளையும் அடிப்படை கோட்பாடுகளையும் மற்றும் அனைத்து விடயங்களையும் முடிவு செய்வதற்காக வழிநடத்தும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அத்துடன் வழிநடத்தல் குழுவிற்கான பரிந்துரைகளைத் தயாரிக்க பதினான்கு தூதுக்குழுக்களின் செயற்குழு தேர்வு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. முன்மொழியப்பட்ட சாசனம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவை ஆணைக்குழு (Commission) என அழைக்கப்பட்டதுடன் அவை முறையே அமைப்பின் பொதுவான நோக்கங்கள் மற்றும் பிரதான கொள்கைகள், உறுப்புரிமை மற்றும் செயலர் அலுவலகம் தொடர்பிலும், பொதுச்சபையின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும், பாதுகாப்பு சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தின் சட்டத்திற்கான வரைவு தொடர்பிலும் ஆராய்ந்தன. சர்வதேச நீதிமன்றத்திற்கான சட்ட வரைபை 1945 ஏப்ரல் மாதம் வாஷிங்டனிற்கு வருகை தந்த 44 நாடுகளின் நீதிபதிகள் குழு தயாரித்தது சிறப்பான விடயமாக கருதப்படுகிறது. அத்துடன் பத்து முழுமையான கூட்டங்கள் மாத்திரம் நடைபெற்றாலும் 400 குழு கூட்டங்கள் நடத்தபட்டு அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொரு விடயமாக அலசி ஆராயப்பட்டது. ஒப்பந்தங்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு விடயத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

விவாதங்கள் மற்றும் வீட்டோக்கள் (Debates and vetos)

எந்த ஒரு நாடும் தமது இறைமை மற்றும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க முன்வராது. அந்த அடிப்படையில் சர்வதேச நீதிமன்றின் அதிகார வரம்பு குறித்து கணிசமான விவாதங்கள் நடைபெற்றது. நீண்ட விவாதங்களின் அடிப்படையில் எந்தவொரு உறுப்பு நாடுகளையும் சர்வதேச நீதிமன்றின் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்ககூடாது எனவும், ஒவ்வொரு நாடும் தமது சுயவிருப்பின் பேரில் தாமாக முன்வந்து நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்றுகொள்ள முடியும் என ஏகமனதாக முடிவு செய்யப் பட்டது. அதேபோல சாசனத்தின் எதிர்கால திருத்தங்கள் தொடர்பான விவாதங்களும், இங்கு அதிக கவனத்தை பெற்றதுடன், இது தொடர்பில் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அனைத்திற்கும் மேலாக சக்தி வாய்ந்த பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய வல்லரசு நாடுகளின் வீட்டோ உரிமை பற்றிய விவாதம் மிகவும் காரசாரமான முறையில் இடம் பெற்றது. இந்த சூடான கருத்துமோதல்கள் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய கருத்து வேறுபாட்டை உருவாக்கி மாநாட்டினையே உடைத்து விடுமோ என்கிற நிலை உருவாகியது இங்கு குறிப்பிடத்தக்கது. ஐந்து பெரும் வல்லரசு (great powers) நாடுகளில் ஒன்று உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் போது பாதுகாப்புசபை சக்தியற்றதாக இருக்கும் அத்துடன் தேவைப்படின் தன்னிச்சையாக இந்த நாடுகள் செயற்பட முடியும் என்ற சிறிய நாடுகளின் அச்சம் இந்த கருத்து முரண்பாட்டுக்கு பிரதான காரணமாக அமைந்தது. எனவே அவை வீட்டோ சக்தியை குறைக்க மிகவும் பிரயாசைப்பட்டன. ஆனால் வல்லரசு நாடுகள் உலக அமைதியை பேணுவதற்கான தார்மீகப் பொறுப்பு தமக்கு இருப்பதால் தமது வீட்டோ அதிகாரம் இன்றியமையாத ஒன்று என தமது சக்தியை குறைக்க ஒப்புக் கொள்ளாத நிலையில், இந்த உலக அமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சிறிய நாடுகள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டன.

இறுதிகூட்டமும் சாசனம் கையொப்பமும்

ஜூன் 25 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஓபரா ஹவுஸில்,(Opera House) இடம் பெற்ற இறுதி கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் வாக்களிப்பு முறையில் வெற்றி பெற்றதுடன் பெரும் வரவேற்பை பெற்றது. வரலாற்றில் இடம் பிடித்த இந்த கூட்டத்திற்கு லார்ட் ஹாலிஃபாக்ஸ் (Lord Halifax) தலைமை தாங்கினார். இறுதியாக ஜூன் 26 1945 அன்று ஒரு சிறந்த உலகத்தை கட்டியமைக்கும் கனவோடு ஐக்கிய நாடுகள் சபைக்கான சாசனம் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட சாசனம்

ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகளினால் கையொப்பமிடப்பட்ட சாசனம் பல நாடுகளின் பாராளுமன்றங்களினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 1945.10.24 அன்று பல ஆண்டுகளாக நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்து உலகில் ஒரு சிறந்த வாழ்வினை மேம்படுத்தும் நோக்கோடு, நான்கு ஆண்டு கால திட்டமிடல் மற்றும் கடின உழைப்பின் பயனாக ஐக்கிய நாடுகள் சபை எனும் ஒரு சர்வதேச அமைப்பு தோற்றம் பெற்றது.

Raji Patterson