அவதூறு

Image


மறந்து விடாதீர்கள்… அந்த விரும்பாத ஒரு நிகழ்வும் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அது ஒன்று மட்டும் உங்கள் வாழ்க்கையில் நடந்து விடவில்லை.

பொய்க் குற்றச் சாட்டை பரப்புவதற்கும், அதை நம்புவதற்கும் பெரிதான ஆதாரங்கள் யாருக்கும் தேவை இருக்காது. சக மனிதர்களுக்குள் இயல்பாக இழைந்து கொண்டிருக்கும் சிறு காழ்ப்புணர்வே அதற்குப் போதுமானது. ஆனால், ‘உண்மை இல்லை’ என மறுப்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் தேவைப்படும். அவை நிதர்சனமற்ற கேள்விகளால் துளைக்கப் படும். நீங்கள் அந்த அவதூறு ‘பொய்’ என்று சொன்னவுடன் ‘நெருப்பு இல்லாமல் புகையுமா’ என ஆரம்பித்து ‘பின் ஏன் அப்படி அவர்கள் சொன்னார்கள்’ என்று தொடர்ந்து ‘அந்த நேரத்தில் அது இப்படி நடந்ததாமே’ என்று உங்களிடம் கேள்விக் கனைகள் நீளும் போது, அஸ்திவாரம் இல்லாத ஒரு சீட்டுக்கட்டின் மாளிகை போல உங்கள் ஸ்திரத் தன்மை உங்கள் முன்னாலேயே சரிந்து விழும். ஒரு நில நடுக்கத்தில் ஆடிப் போகும் பூமியாக உங்களை ஆடிப் போக செய்து விடும்.

இது தான் அந்த அவதூறைக் கிளப்பி விட்டவர்களின் நோக்கம். எனவே, எத்தகைய அவதூறு உங்களைப் பற்றி பரப்பப் பட்டாலும் அது உங்கள் மனதை பாதிக்காதவாறு முதலில் திடமாக இருங்கள்.

இப்படி அவதூறுக்கு ஆளாகுவது அனைவருக்கும் பொதுவானது தான் என்பதை உங்களுக்குள் சொல்லிக் கொண்டு முதலில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு உங்களை நீங்கள் ஆசுவாசப் படுத்துங்கள்.

இந்த அவதூறு வந்ததாலேயே நீங்கள் தவறானவராக ஆகி விட மாட்டீர்கள் இதிகாசங்களையும் புராணக் கதைகளையும் எடுத்துப் பாருங்கள். இன்றும் நாம் போற்றக் கூடிய சில மகான்களும் மகரிஷிகளும் பல்வேறு விதமான அவதூறுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் திடமும் மன உறுதியுமே அவர்கள் மேல் பட்ட அவதூறை அவர்கள் மேல் படியாமல் விலகச் செய்திருக்கிறது என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

அது எவ்வளவு சிரமமானதாக இருந்தாலும் கையாளப் படக்கூடிய விஷயம் தான் என்பதை உணர்ந்து எதற்கும் உடனே ரியாக்ட் பாண்ணாமல் ரெஸ்பான்ட் பண்ண முடிவு செய்யுங்கள். அது உங்களைப் பற்றிய ஒன்று என்றாலும் அதை சற்று தள்ளி வைத்து ஒரு மூன்றாம் கோணத்தில் அனுகி சரி செய்யப் பாருங்கள். உங்கள் தகுதியை மாசு படுத்தி விட்டார்களே என்று வருந்தி உங்கள் தகுதியை விட்டும் அவர்கள் லெவலுக்கு இறங்கிப் போய் விடாதீர்கள்.

எந்த சூழலிலும் திடமாக இருங்கள். எந்த அவதூறும் தன் தடம் பதிக்க முடியாமல் தடம் மாறி மறைந்து விடும்.

-Dr.Fajila Azad, International Lifecoach

Courtesy: Muduvai Hidayath