சங்கரன்கோவிலில் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்

Image



தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் பா.ஜான்பீட்டர் விடுத்துள்ள அறிக்கை:

சத்யம் தொலைக்காட்சி மீதான தாக்குதல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி ஊடகவியலாளர்களுக்கு ஆட்சியாளர்கள் அளித்து வரும் பாதுகாப்பு நிலைமையை ஊரறியச் செய்துள்ள அதே வேளையில் தொடர் சம்பவமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தினத்தந்தி நாளிதழ் நிருபர் காளைப்பாண்டியன் அவர்களது வீடு புகுந்து அவரை தாக்கியுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உண்மையை உலகிற்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது என்பதற்கு மற்றொரு சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. ஜனநாயகத்தின் நாண்காவது தூண் என்று வெறும் வாய்வார்த்தைக்காக பத்திரிகை துறையை இந்த நாடும், ஆட்சியாளர்களும் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆட்சியாளர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதே உண்மை.

இதே நிலைமை நீடித்தால் பத்திரிகை அறம் என்பது முற்றிலுமாக கொலைசெய்யப்பட்டு விடும். இந்த செயலை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. சங்கரன்கோவில் தினத்தந்தி நிருபர் காளைப்பாண்டியனை தாக்கியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் பத்திரிகையாளர்களை பாதுகாக்க கடும் சட்டம் இயற்ற தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

B.John Peter

9791544880