துபாயில் மரணமடைந்த திருச்சி இளைஞரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

Image



திருச்சி : துபாய் நகரில் உள்ள அல் கூஸ் பகுதியில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், சிறுவயலூர்பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி மரணமடைந்தார். விசிட் விசாவில் வேலை தேடி சென்ற அவர் இறந்த செய்தி துபாய் போலீசார் மூலம் இந்திய துணை தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்திய துணை அதிகாரி அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்தைதொடர்பு கொண்டு அவரது குடும்பத்தினர் முகவரியை வழங்கி அவர்களது தொடர்பு எண் பெற்று தெரிவிக்க கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து சிறுவயலூர் கிராமத்தின் அருகேயுள்ள கே.கே.நல்லூர் தபால் நிலைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அங்குள்ள அலுவலரிடம் விபரம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ளப்பட்டது. அந்த குடும்பத்தினர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர திருச்சி மாவட்ட ஆட்சியர் மூலம் இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகமும் இது குறித்து இந்திய துணை தூதரகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது. போலீசார் விசாரணை நிறைவடைந்ததையடுத்து சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் மூலம் 25.09.2022 இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. நள்ளிரவில் கடுமையான மழை பெய்த போதும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆம்புலன்ஸ்

அந்த குடும்பத்தினரின் நிலைமையை கருத்தில் கொண்டு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் 'நல்லுங்கள்' அமைப்பின் மூலம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தர்மராஜ் உடல் அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்த பணியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியர்கள் சையது முஹம்மது, சமூகப்பணி துறை பேராசிரியர் முனைவர் ஷேக் ஃபரீத், அந்த துறையின் இரண்டாம் ஆண்டு முதுநிலை படிப்பு மாணவர்கள் முஹம்மது பாஷில், ஷபிகுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர். தர்மராஜின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல இந்திய துணை தூதரகம் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கியது. இந்த பணிகளுக்கு துபாய் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் உள்ளிட்டோர் ஆதரவு வழங்கினர்.

நன்றி

தர்மராஜின் உடலை தாயகத்துக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுத்த இந்திய துணை தூதரகம், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பின் 'நல்லுங்கள்' அமைப்பு உள்ளிட்டவற்றுக்கு அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.