மனமும் எண்ணங்களும்

Image



மனம் அற்புதமான, அதிசயமான ஒன்று. மனதின் சக்தி அபாரமானது, மனத்தின் இயக்கம் தான் மனிதனின் இயக்கம். மனதின் தரத்தை பொருத்தது தான் ஒரு மனிதனின் தரமும் இருக்கும். அப்படிப்பட்ட மனம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

மனம் என்பது ஒரு அலை. மனத்தின் இயக்கத்‌தை நினைவு மண்டலத்தில் எடுத்து காட்டுவது தான் மூளை. புலன்கள் மூலம் நாம் உணரும், பார்க்கும், கேட்கும் சுவைக்கும், நுகரும் உணர்வுகளை அனுபவமாக சுருக்கி பதித்து வைத்து, பின் தேவைப்படும் போது மூளை மூலம் விரித்து காட்டுவதாக இயங்கி கொண்டிருக்கிறது மனம். இவ்வாறு எந்நேரமும் இயங்கி கொண்டிருக்கும் மனத்தின் இயக்கத்‌தை அதன் அலை சுழலை கொண்டு கணக்கிடலாம்.

ஒருநொடிக்கு எத்தனை அலை சுழல் அதாவது சைக்கில்ஸ் பெர் செகண்டில் மனம் இயங்குகிறது என்பதை கொண்டு மனத்தின் இயக்கத்‌தை கணக்கிடலாம். இ.இ.ஜி என்ற கருவி மூலம் இதை அளக்க முடியும். அதன் படி 14 முதல் 30 சைக்கில்ஸ் பெர் செகண்ட் என்று இயங்கும் மனத்தின் அலையை பீட்டா வேவ் என்றும் 8 முதல் 13 சைக்கில்ஸ் பெர் செகண்ட் கொண்டு இயங்கும் மனதின் அலையை ஆல்ஃபா வேவ் என்றும் அதற்கு கீழ் இயங்கும் அலைச்சுழல் தீட்டா என்றும் டெல்டா வேவ் என்றும் கணக்கிடப்படுகிறது.

பொதுவாக நம்முடைய மனம் தினசரி கடமைகளை செய்து கொண்டிருக்கையில் 14 முதல் 20 சைக்கில்ஸ் பெர் செகண்ட் என்ற பீட்டா வேவில் தான் இயங்கி கொண்டிருக்கும். சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் 20 முதல் 30 வரை கூடப்போகும்.

எப்பொழுதும் உணர்ச்சிகளுடன் போராடி கொண்டிருக்கும் நம்முடைய மனம் பீட்டாவேவில் தான் பெரும்பான்மையான நேரங்களில் இருக்கிறது. ஆனால் ஆல்பாஃவேவில் மனம் இருப்பதுதான் உகந்தது. மனதின் ஆற்றல் ஆல்ஃபாவேவில் தான் அதிகமாய் இருக்கும், ஞாபக சக்தி நன்றாக இருப்பது, எண்ணத்தில் திண்மை இருப்பது இவை எல்லாவற்றிக்கும் மேல் மனம் அமைதியாக இருப்பது ஆல்பாஃ நிலை தான்.

ஒரு வில்லின் நாண் கீழே இறங்க அதிலிருந்து புறப்படும் அம்பு அதிக தூரம் சரியான இலக்கை நோக்கி பாய்வது போல் தான் மனதின் அலைசுழல் குறைய குறைய அதிலிருந்து எழும் எண்ணங்களும் வலிமையோடு துல்லியமாக இயங்கும். எண்ணங்களின் கூட்டு இயக்கம் தானே மனம். எண்ணங்கள் எப்படி மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன என்று பார்த்தால் இது நமக்கு புரியும்.

பொதுவாக எண்ணங்கள் தான் மனிதனின் தேவை மற்றும் சுழ்நிலைக்கு ஏற்ப முதலில் தோன்றுவது எண்ணங்களின் தன்மை, நம்முடைய அனுபவம் நம்பிக்கைகள் போன்றவற்றை பொருத்தே இருக்கும். எண்ணத்திற்க்கு ஏற்பதான் நம் உணர்வுகள் இருக்கும். உணர்வுகளுக்குகேற்பத்தான் நம்முடைய நடவடிக்கைகள் அமையும்.

பிறகு நடவடிக்கைகளுக்கு ஏற்பத்தான் அதன் விளைவுகள் இருக்கும். நாம் நல்ல சந்தோஷமான இணக்கமான விளைகளைத் தானே நம் வாழ்க்கையில் எதிர் பார்க்கிறோம். அப்படி என்றால் நாம் சரி செய்ய வேண்டியது எதை? நம் எண்ணத்தை தானே? எண்ணம் சரியாக இருந்தால் உணர்வுகள் நன்றாக இருக்கும். உணர்வுகள் நன்றாக இருந்தால் தான் நாம் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் நன்றாக இருக்கும்.

Image


M.Vimalatharani M.sc(couns&psyc),MD(acu),DHBM

psychotherapist