இருண்ட நிலைமாறுமென மருண்டமனம் நினைக்கிறது !
தடுப்புச்சுவர் அமைத்தாலும் தாண்டியே வரவேனென்று அடம்பிடித்துக் கொரனோவும் ஆக்ரோஷம் கொள்கிறதே உலகிலிப்போ கொரனோவை ஒழிப்பதற்கு ஆராய்ச்சி பலநிலையில் நடந்தாலும் பரவும்நிலை குறையலையே !
கொரனோவின் அரசாட்சி கொடிகட்டி பறக்கிறதே எனையழிக்க யார்வருவார் என்றதுவும் நினைக்கிறது கொடிபிடித்துக் கொரனோவும் அரசாட்சி செய்வதற்கு கொள்கையினை வகுத்தபடி கோருருவம் எடுக்கிறதே !
விஞ்ஞானம் இப்போது விழிபிதுங்கி நிற்கிறது எஞ்ஞான்று கொரனோவை இல்லாமல் செய்வதென கொரனோவோ புத்துணர்வு பெற்றெழுந்தே வருகிறது அநியாயமாய் உயிர்கள் அளவின்றிப் போகிறதே !
வந்தாலும் தெரியாது தொற்றிடினும் தெரியாது வந்தபின்பும் அறிகுறிகள் தெள்ளெனவே காட்டாது பொல்லாத வடிவத்தை தாங்கிவரும் பேரழிவாய் இவ்வுலகில் கொரனோவும் இப்போது திகழ்கிறதே !
மருந்துவரும் மருந்துவரும் என்கின்ற நினைப்பாலே இருண்ட நிலைமாறுமென மருண்டமனம் நினைக்கிறது அருந்துகின்ற அனைத்தையுமே மருந்தாக்க எண்ணுகின்ற பெருவிருப்பம் மக்களிடம் பேருணர்வாய் எழுகிறது !
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ,Melbourne,Australia
Courtesy :Muduvai Hidayath