ஆதி சங்கரரின் காலம்

Image



வேதத்திற்க்கு உரையெழுதியவர்களில் மிகவும் முக்கியமானவராய் கருதப்படுபவர் ஆதி சங்கரர் ஆவார்.

இவரின் காலம் கிபி 788முதல் 820 என்று பெரும்பாலம் கருதப்படுகிறது. ஆனால் ஹஜிமே நாகமோரா இவரின் காலம் கிபி 700 முதல் 750 என்றும், தில்மம் வெட்டர் இவர் காலம் கிபி 650 முதல் 800 என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிருங்கேரி சங்கராச்சாரியர்கள் கிபி 788முதல் 820 என்று கருதுகிறார்கள். சிருங்கேரி மடத்தின் பழைய சம்பிரதாயப்படி ஆதிசங்கரரின் காலம் கிமு 1ம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

காஞ்சி சங்கராச்சாரியர்கள் கிமு 509 முதல் 477 என்றும், புரி சங்கராச்சாரியர்கள் 509-475 என்றும் துவாரகை சங்கராச்சாரியர்கள் கிமு 471 என்றும் கருதுகிறார்கள்.

ஆதிசங்கரர் தென்னகத்தைச் சேர்ந்தவர். ஆனால் இதுவரை ஆதிசங்கரரின் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சியைக் மேற்கொண்டவர்கள் எவருமே தென்னாட்டு நூல்களின் குறிப்பாய் தமிழ் நூல்களின் அடிப்படையிலோ அல்லது தென்னகத்தில் சைவம், வைணவம் முதலிய சமயங்களின் வளர்ச்சியின் வரலாற்றின் அடிப்படையிலோ அவரது காலத்தை ஆராயவில்லை.

கிபி 7, 8ம் நூற்றாண்டுகளில் நாயன்மார் மற்றும் ஆழ்வார்கள் காரணமாக பக்தி பெருக்கெடுத்து ஓடியது.

திருஞானசம்பந்தர், மற்றும் அப்பரின் திருப்பதிகங்களிலிருந்து வேதநெறி செழிப்பாய் இருந்ததைக் காண முடிகிறது.

அப்பேற்பட்ட காலத்தில் நலிவடைந்த வேதங்களுக்கு உயிரூட்டி, இறைவனே உலகத்திற்க்குக் காரணம் என்னும் தத்துவத்தை சாங்கியர்களின் கொள்கைகளுக்கு எதிராக நிலைநிறுத்தி, பக்தியைக் குறிப்பிடாமல் ஞானத்திற்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் தன் தத்துவத்தை ஆதிசங்கரர் கூறியிருப்பாரா என்னும் கேள்வி எழுகிறது.

மேலும் திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் அற்புத திருவந்தாதி முதலிய நூல்களில் வேதாந்த கருத்துக்கள் நிரம்பவுள்ளன.

இவர்கள் இருவரின் காலம் கிபி 5ம்நூற்றாண்டு. தமிழ் சங்க இலக்கியங்களின் காலம் கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிபி 1ம்நூற்றாண்டு வரை என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியல் இங்கேயே ஜீவன்முக்தி அடைந்த அந்தணர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

மற்றொரு சங்க இலக்கியமான குறுந்தொகையின் 156ம் பாடலில் பிரம்மசரியத்திலிருந்து சந்நியாசம் எடுத்துக் கொண்ட ஒரே தண்டத்துடன் கூடிய ஒரு சந்நியாசியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

தன் அடிப்படையிலும் வேறு சில ஆதாரங்களின் அடிப்படையிலும் ஆதி சங்கரரின் காலம் கிமு 5ம் நூற்றாண்டு என்னும் தனது வாதத்தை முனைவர் திருமதி ரா. சரஸ்வதி சாய்நாத் அவர்கள் The Date of Adi Sankaracarya and Emergence of Saivism as a Popular Religion in South India என்னும் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்வைக்கிறார்.

மேற்சொன்ன விஷயங்களையும் வைதிகமான சைவ சமயத்தின் வளர்ச்சியைப் பற்றிய கருத்துக்களையும் கொண்ட இந்த ஆராய்ச்சிக் கட்டுரையானது Springer Journal of Indian Council of Philosophical Research என்னும் இதழில் பிரசுரமாகியுள்ளது.

இக்கட்டுரையைக் கீழ் கண்ட இணையதள முகவரியில் படித்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.



10.1007/s40961-023-00301-4