சமையல் சந்தேகம்

Image

கடினமாகிவிட்ட பாலாடைக் கட்டியை இளக வைக்க என்ன செய்வது? வெந்நீரில் நனைத்துப் பிழிந்த துணியால் சிறிது நேரம் பாலாடைக் கட்டியை சுற்றி வைக்கவும். அது இளகும். பாலாடைக் கட்டியை சமைக்கிற போது எப்போதுமே மிதமான தீயில்தான் வைக்க வேண்டும். ரொம்ப நேரம் அடுப்பில் வைத் திருக்கவும் கூடாது. காலையில் செய்கிற சப்பாத்தி இரவுக்குள் வறண்டு, அப்பளம் மாதிரி ஆகிவிடுகிறது. இதைத் தவிர்க்க ஏதேனும் வழி உண்டா? தோசைக் கல்லிலேயே வைத்து மூடியிருந்தால் சப்பாத்தி அப்படித்தான் ஆகும். தவிர மாவில் தண்ணீருக்குப் பதிலாக பால் ஊற்றிப் பிசைந்து செய்து பாருங்கள். நீண்ட நேரத்திற்கு மென்மையாக இருக்கும். பொறியல், கிரேவி போன்றவற்றின் நிறம் சிகப்பாக வர என்ன செய்ய வேண்டும்? ஃபுட் கலர் சேர்க்காமல் வேறு வழி இருக்கிறது. இரண்டு, மூன்று சிகப்பு மிளகாய்களை, விதை நீக்கி, அரை கப் தண்ணீரில் ஊற வையுங்கள். சிறிது நேரம் கழித்து அதைக் கசக்கிப் பிழிந்தால் சிகப்பாக வரும். அதை சமையலுக்குப் பயன்படுத் தலாம். சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது. குக்கரில் சாதம் வைக்கும் பொது குக்கரின் நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது. பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் பொது, சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்தால், சாதம் நன்றாக தனி தனியாக பிரிந்து நன்றாக வெந்து விடும். வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.