தொடர்வது ஏனோ...

Image



வறுமை எமை சூழ்ந்த போதும் வாரிசுகளை வளர்த்தெடுக்க
வாடி நொந்த நெஞ்சங்களால்
வாழ்வியல் மறந்து போனோம்

வந்து காப்பாற்றுவார் என்றிருந்த
வாரிசுகள் மன அழுத்தங்களில்
வழி தவறி முறையற்ற முடிவை
வரித்துக் கொண்டதால் மனதில்

வடுக்கள் வார்த்தெடுத்து விட்ட
வலிகள் சொல்லி அழ முடியவில்லை
வாழ வழியும் தெரியவில்லை
வந்து உதபுபவர் யாரும் இல்லை

கர்ப்பத்தில் கலைந்திருந்தால் உம்
கனவுகள் சிதைந்திருக்காதே எம்
கண்களில் நிழலாடி விட்டு இன்று
காணா தேசம் சென்றதேனோ

உலாவரும் தென்றல் நிலை மறந்து
ஊதக் காற்றாய் மாறிப் போனது
ஊதாக் கதிர்கள் ஓசோன் படலம்
உடைத்து உயிர்களை கொன்றது

கதிர்கள் விரியவும் இல்லை
காரிருள் விலகவும் இல்லை
கதி என்று நம்பியவரிடம்
கருணையை காணவும் முடியவில்லை

அநீதி கண்டு எதிர்த்து நிற்கும்
ஆற்றலேறுகள் அமைதி காப்பதேன்
அடிமையாய் அடங்கி போனதேன்
ஆற்றாமை தான் காரணமோ

உள்ளொன்றும் புறமொன்றுமாய்
உத்தமர் சிலர் இரட்டை வேடங்கள்
உலகில் கோலோச்சும் போது
உண்மைகள் மடிந்து தானே போகும்

அனிதாவோடு நின்றிடும் நீட் என்றார்
அது தொடர்கதை ஆனதும் ஏனோ
நீட் தேர்வின் கொடுமைகள் இன்னும்
நிரந்தரமாய் தொடர்வதும் ஏனோ
நியாயம் தெரிந்தோரே சொல்லுங்கள்

கவின் முகில் மு முகமது யூசுப். உடன்குடி