மேதினமாய் மலருமிந்த பெருநாளில் பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர்

Image


உழைக்கின்றார் வாழ்வினிலே உயர்ந்தநாள்
உழைப்பினுக்கு மதிப்பளிக்கும் உன்னதநாள்
அந்நாளில் தொழிலாளர் அனைவருமே
அரைவயிறாய் கால்வயிறாய் அழுகின்றார் !

மேதினமாய் மலருமிந்த பெருநாளில்
பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர்
எங்கிருந்தோ வந்தவிந்த கொரனோவால்
ஏக்கமுற்று வாடுகிறார் தொழிலாளர் !

ஊர்முழுக்கப் பரவிவரும் கொரனோவால்
ஊனமுற்றுக் கிடக்கிறது தொழிலெல்லாம்
ஊதியத்தை எதிர்பார்க்கும் கூட்டமெலாம்
உயிர்போகும் ஆபத்தை நெருங்குகிறார் !

முதலாளிக் கெதிராகப் போராடி
முன்னின்று எடுத்தார்கள் சுதந்திரத்தை
கொரனோவுக் கெதிராகப் போராடி
கொடுந்துன்பம் எய்துகிறார் தொழிலாளர் !

ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள்
அனுசரணை முதலாளி பக்கமேயாம்
அலுப்பின்றி உழைக்கின்ற தொழிலாளர்
அவர்கண்ணில் பட்டுவிடல் அரிதேயாம் !

மேடையேறி தொழிலாளர் நலனுரைப்பார்
மேடைவிட்டு கீழ்வந்தால் அதைமறப்பார்
தொழிலாளர் என்னாளும் துயரென்னும்
வலையதனில் அகப்பட்டே வதைபடுவார் !

என்னாளும் இன்னலுறும் தொழிலாளர்
மேநாளில் சுதந்திரமாய் பேசிடுவார்
அந்நாளும் பேசாத நாளாக்க
பொல்லாத கொரனோவும் வந்ததிங்கே !

மேடைபோட்டு மேதினத்தில் தொழிலாளர்
மேலான பலகருத்தை முழங்கிடுவார்
வாய்விட்டுக் கருத்துரைக்க வாய்க்கும்நாளும்
வாய்க்காமல் செய்ததிந்த கொரனோவும் !

Image


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா