அன்னையர் தினம்

Image



ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் தனக்கு தெரிந்த அனைத்துக் கலைகளையும் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி அன்போடு குழந்தைக்கு கற்றுக் கொடுக்கும் பேராற்றல் தாய். தாயிலிருந்துதான் ஒரு தலைமுறையே தொடங்குகிறது. பேரன்பின் பிறப்பிடமான தாய், நம்மை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டுவதோடு நம் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும் நம்பிக்கை சிகரமாகவும் திகழ்பவர். பூமித்தாய் நம்மை தாங்குவதற்கு முன்பே பத்து மாதங்கள் நம்மைச் சுமந்தவள் நம் தாயே!!!

“அம்மா"....

நம் உயிரையும், உடலையும் கொடுத்த கடவுளின் மறுஉருவம் தான் "அம்மா". நம் செம்மொழியில் இதற்கு அழகான விளக்கம் உள்ளது.

உயிர் எழுத்தில் "அ"

மெய் எழுத்தில் "ம்"

உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து

அழகுத் தமிழில் கோர்த்து எடுத்த மாணிக்கம் "அம்மா" என்ற உன்னதமான சொல்.

அன்னையர் தினம் எப்போது

இந்தியா, அமெரிக்க மற்றும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. வேறு சில நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் அன்னையர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

அன்னையர் தின வரலாறு

அன்னையர் தினம் 1908 ல் முதன்முறையாக கொண்டாடக் காரணமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த “அன்னா மேரி ஜார்விஸ்”, அவரின் தாய் “ஆன் மரியா ஜார்விஸ்” அமெரிக்காவில் "மதர்ஸ் டே வொர்க்” என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் அந்தப் பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு சுத்தம், சுகாதார பராமரிப்பு, குழந்தையை எப்படி பேணுவது போன்ற பயிற்சிகளை அளித்து வந்தார். அவர் 1905-ம் ஆண்டு இறந்துவிட்டார். தாயின் அன்பையும் தியாகத்தையும் நினைவுகூறும் வண்ணம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவித்து, அதனை தேசிய விடுமுறை நாளாக்க வேண்டும் என்று நினைத்தார் அவரின் மகளான “அன்னா மேரி ஜார்விஸ்”.

1907-ஆம் ஆண்டு முதல் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு "கையெழுத்துப் பிரச்சாரம்" நடத்தினார், இறுதியில் 1914-ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் “தாமஸ் உட்ரூ வில்சன்” அன்னையர் தினத்திற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அன்றிலிருந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அன்னையர் தினம் என்பது மனிதகுலத்திற்கு மட்டுமல்ல....இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் பிரதானமானது. அன்னையர் தினத்தை இந்த உலகம் கொண்டாடுவதற்கு முன்பே நம் முன்னோர்கள் தன்னைத் தாங்கியிருக்கும் பூமியை “பூமித்தாய்” என்றும், தான் வாழ்ந்த நாட்டினையே “தாய்நாடு” என்றும், தான் பேசிய மொழியைத் “தாய்மொழி” என்றும் தாயை முன்னிலைப்படுத்திக் கொண்டாடியுள்ளனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதலிடத்தில் வைத்து அழகு பார்த்தவர்கள் நம் முன்னோர்கள்.

நம் முன்னோர்கள் நாள்தோறும் அன்னையர் தினத்தைக் கொண்டாடியுள்ளனர் என்றே சொல்லலாம். அவர்கள் தினந்தோறும் அன்னையின் பாதங்களைத் தொட்டு வணங்கியும், அன்னை சொல் தட்டாதவர்களாகவும் மற்றும் அன்னைக்குச் சேவைகள் செய்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். இதனை நம் இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் காண முடிகிறது. இன்றைய தலைமுறையினர் பண்டிகை தினங்களிலும், சுபகாரிய நிகழ்வுகளிலும் மற்றும் தொலைதூரப் பயணங்களின்போதும் அன்னையின் பாதங்களைத் தொட்டு வணங்கி தன் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தாய்மை முதல் நல்ல குடிமகன் வரை

தாய் கருவுற்ற நாள்முதல் குழந்தையிடம் பேச ஆரம்பிக்கிறாள், உனக்காக நான் இருக்கிறேன் என்று தைரியத்தை ஊட்டி, குழந்தை பிறப்பதற்கு முன்பே ஒவ்வொரு நாளும் கடவுளிடம் வேண்டி, மூச்சுவிட சிரமப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பத்து மாதங்களும் ஒரு சாய்த்துப்படுத்து, தான் எத்தனை முறை வாந்தி எடுத்தாலும் தனக்கு பிடித்த உணவைப் புறந்தள்ளி, ஊட்டம் தரும் சரிவிகித உணவை மட்டுமே உண்று, வயிற்றுக்குள் இருந்தபோது தொப்புள்கொடி வழி உணவூட்டி, வயிற்றில் எட்டி உதைத்த போதெல்லாம் பிஞ்சுப் பாதங்களைத் தொட்டு பரவசமடைந்தும், பிள்ளையின் இன்முகத்தைப் பார்க்கப் போகும் அந்த நாளை எண்ணி, எண்ணிப் பூரித்தும், தன்னை மறுபிறவி எடுக்க ஆயத்தப்படுத்தியும் அனைத்து வலிகளையும் தாங்கியவளாகவும், பாலூட்டி, சீராட்டி, தொட்டிலில் இட்டு, தாலாட்டுப் பாடி, ஒவ்வொரு நொடிப்பொழுதும் காக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது தாயே!!! இதனாலேயே "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்று நம் ஒளவை பாட்டி தாயைப் போற்றி அன்றே பாடியுள்ளார்.

உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் தான் ஈன்றெடுத்தக் குட்டிகளை ஒரு குறுகிய காலம் மட்டுமே அரவணைத்து வளர்க்கும் இயல்புடையது. ஆனால், மாந்தகுல தாய் தன் குழந்தைக்கு ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்றுக்கொடுத்து, கல்வி புகட்டி, அறிவைத் தீட்டி, சிறந்த பண்பாளனாகவும் நற்குணங்களுடையவனாகவும் வளர்த்து சமுதாயத்திற்கு ஒரு நல்ல குடிமகனாக கொடுப்பதற்கு 20 ஆண்டுகள் அரவணைத்து வளர்க்கிறாள்.

"என்னுடைய அத்துனை நல்ல குணங்களுக்கும் காரணம் என்னைப் பெற்றெடுத்தத் தாயே", என்கிறார் ஆபிரகாம் லிங்கன்.

தாயின் பேரன்பு

குடும்பத்தின் முகவரியாய்த் திகழும் தாய் தன்நலன் கருதாது குழந்தைகள் நலனுக்காகவே உழைத்துப் பற்பல தியாகங்களைச் செவ்வனே செய்பவள். நாம் அடிபடும்போதெல்லாம் நம்மை விட வலியால் அதிகம் துடிப்பவளும், குழந்தையின் அழுகையைப் புரிந்து கொள்ளும் அகராதியும் தாயே. நாம் குழந்தையாக இருந்தபோதிலிருந்து இன்று வரை நம் விருப்பங்களையும் தேவைகளையும் குறிப்பறிந்து பூர்த்தி செய்பவள் தாயே என்பதை மறுக்க இயலாது.

இவ்வுலகில் உறவுகள் பல இருந்தாலும் யாராலும் தாய்க்கு நிகராகி விட முடியாது. ஏனென்றால் தன் பிள்ளைகள் மீது எந்த எதிர்பார்ப்புகளுமின்றி தூய அன்பையும் அரவணைப்பையும் ஒரு உறவில் தர முடியும் என்றால் அது நம்மை ஈன்றெடுத்தத் தாயினால் மட்டுமே முடியும் . “நீங்கள் உங்கள் தாயைப் பார்க்கும் பொழுது உலகத்திலேயே உள்ள தூய்மையான நேசத்தையும் காதலையும் பார்க்கிறீர்கள்" என்றார் சார்லி பென்னடோ.

நம் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணி தாயிடம் "அம்மா உங்கள் ஆசை என்ன? ; உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று நாம் கேட்டால், " நீ நல்லா இருந்தா அதுவே போதும்" என இரத்தினச் சுருக்கமாக ஒரு வரியில் முடித்துக் கொள்பவள் தாய்.

பேராற்றல்

நாம் தூங்கி எழுமுன் எழுந்து, நாம் தூங்கிய பின் தூங்கி, நாளும் பம்பரமாய் குடும்பத்தினர் நலத்திற்காக அயராது உழைத்து, எப்போதும் சிரித்த முகத்துடன் நம்மை பேணிக்காப்பது தாய். ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து விட்டாலும், தாய் தனது கடின உழைப்பாலும் தியாகத்தாலும் குடும்பத்தைச் சீர்தூக்கி, தன்னுடைய அனைத்துக் குழந்தைகளையும் தலைசிறந்த சாதனையாளர்களாகச் செதுக்கும் பேராற்றல் படைத்தவள். சரித்திரத்தில் சாதனையாளர்கள், பெருந்தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காணும்போது, தாயின் வழிநடத்துதலால் அவர்கள் உயர்ந்ததைக் காண்கிறோம். இதற்கு உதாரணமாக கர்மவீரர் காமராசர், ஆல்பர்ட் எடிசன் மற்றும் பலரைச் சொல்லலாம்.

நம் தந்தை எவ்வளவு சுதந்திரம் நமக்கு கொடுத்திருந்தாலும் நம் பிரச்சனைகள், இன்ப துன்பங்களைப் பகிர தாயைத் தான் தேர்வு செய்கிறோம், ஏனென்றால் எதையும் பொறுமையுடன் கையாலும் பக்குவமுடையவள். தாய் மூலம்தான் அச்செய்தி பின் தந்தைக்குச் செல்லும்.

இன்றைய பிள்ளைகளே..

நம் பெற்றோர்கள் இல்லையென்றால் நாம் இன்று இல்லை. அவர்களை மறக்கவோ உதாசினப்படுத்தவோ கூடாது. "உங்களுக்கு என்ன தெரியும்?" , ஸ"உங்களுக்குச் சொன்னால் புரியாது", “எனக்கு என்ன செய்தீர்கள்” போன்ற வார்த்தைகளை ஒருபோதும் பெற்றோரிடம் பயன்படுத்தாதீர்கள். உங்கள் கைப்பிடித்து நடைப்பழக்கி இவ்வுலகில் உங்களை தன்னிச்சையாக இயங்க வைத்தக் கடவுள் பெற்றோர்களே!!! நீங்கள் மாணவர்களாகவோ, வேலைக்குச் செல்பவராகவோ இருந்தாலும் கூட வீட்டில் பெற்றோர்க்கு முயன்றவரை உதவி செய்வதை நாளும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

“தாயைப் போற்றி வீழ்ந்தவனுமில்லை
தாயைத் தூற்றி வாழ்ந்தவனுமில்லை” – என்பதை நினைவு கூறுவோம்.

நம் பசி அறிந்து உணவிடும் அன்ன இலட்சுமியாகவும், நாம் நோயுற்றப் போதெல்லாம் நமக்கு மருத்துவராகவும், நல்லனவற்றைப் போதிக்கும் ஆசானாகவும், நாம் துவண்ட போதெல்லாம் நம்மை ஊக்கப்படுத்தும் சிறந்த தோழியாகவும், நம் விருப்பத்தை நிறைவேற்றும் தேவதையாகவும், நம் மீது எவரேனும் வீண்பழி சுமத்தினால் நமக்காக வாதாடும் வழக்கறிஞராகவும் பற்பல நிலைகளில் நம்மைக் காக்க பல அவதாரங்கள் எடுக்கும் தாயைக் கெளரவப்படுத்தி தினமும் கொண்டாடிட வேண்டாமா?

அன்னையர் தின உறுதிமொழி

வயோதிக காலத்தில் ஒரு தாய், பிள்ளைகளின் அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே எதிர்பார்க்கிறாள். போட்டி மிக்க இவ்வுலகில் நாம் அனைவரும் தங்களுடைய தேவைக்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறோம் . இருப்பினும் நேரத்தைப் பெற்றோருக்கென ஒதுக்கி அவர்களுடன் பேசுங்கள், சேர்ந்து உட்கார்ந்து உணவுண்டு அன்பைப் பகிருங்கள். தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் அன்புடன் அரவணைத்தால் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே.

குழந்தைக்காக சத்தான உணவுண்ட தாய், குழந்தை வளர்ந்த பின் தன்நலன் கருதி சத்தான உணவை எடுத்துக்கொள்ளாமல் பிள்ளைகளைப் பேணுவதிலேயே நேரத்தைச் செலவிடுவதால், நோய்களை எதிர்கொள்கிறாள். உடல் உபாதைகள், உடல்சோர்வு இருந்தால் கூட பிள்ளைகளிடம் அதை வெளிப்படுத்தாமல் விட்டுவிடுகிறாள். நாமாக அவர் முகமாற்றங்கண்டு "உடம்புக்கு ஏதுவாது பிரச்சனையா அம்மா?" என்றால், "இல்லை, நான் நல்லாதான் இருக்கிறேன்" என்று சமாளிப்பார் தாய். ஆகையால் ஆண்டுக்கு இருமுறை தாயை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று தாய்நலம் பேணும் பிள்ளைகளாய் என்றும் இருப்போம் என இந்த அன்னையர் தினத்தில் உறுதியேற்போம்...

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

Image



கீதா கிருஷ்ணன்