அமைதியான உலகம் என்பது சாத்தியமான ஒன்றா… !

Imageபல்வேறு நாடுகளை சார்ந்த மாணவர்களின் அறம் சார்ந்த கேள்விகளுக்கு மாண்புமிகு தலாய்லாமா அவர்களின் தீர்க்கமான பதில்

15-10-20 மாணவர்கள் தினமாக கொண்டாடப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாம் அறக்கட்டளையுடன் இணைந்து உலக தொண்டு நிறுவனமான வேர்ல்ட் ஹ்யூமானிட்டேரியன் ட்ரைவ் (WHD), “உயிர்வாழ ஏற்ற பூமி, உலக அமைதிக்கு இணைந்து உழைப்போம்” எனும் தலைப்பில், மாண்புமிகு தலாய்லாமாவிடம், பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள், எழுச்சிமிகு கேள்வி கேட்கும் நிகழ்வை இணையம் வழி ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாடு உட்பட பல இந்திய மாணவர்களுடன், லண்டன், ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சைப்ரஸ் என பல நாடுகளிலிருந்து கலந்து கொண்ட மாணவர்கள், இன்றைய காலகட்டத்தில் மனிதமும், ஒற்றுமையும் கூடிய உலகம் சாத்தியமா என பல்வேறு கேள்விகளை எதிர்பார்ப்புடனும், ஆதங்கத்துடனும் கேட்டனர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய தலாய்லாமா அவர்கள், சுய ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், தன்னலம் சாராமல் பிறருக்கு உதவும் குணத்தையும், இன,மதவேறுபாடின்றி உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே என்னும் எண்ணத்தையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் தனிமனித அமைதியையும், நிறைவான வாழ்க்கையையும் அடையலாம், அதன் மூலம் நிம்மதியான உலகத்தையும் உருவாக்கலாம் என மிகத் தெளிவாகக் கூறினார்.

இளகிய மனமும் இரும்பு உள்ளமும் கொண்டவர் அப்துல் கலாம் என்று பலவாறு அவரை புகழ்ந்து கூறிய தலாய்லாமா, இயல்பில் ஒவ்வொரு மனிதனுமே அன்பும் அறமும் உடையவனாகவே இருக்கிறான். அதனால்தான் தியானம் செய்யும் போது அவன் மனம் அமைதி அடைகிறது. கோபமும் வெறுப்பும் ஒருவன் ஏதோ ஒன்றைத் தொட்டும் அச்சத்தில் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறான். அதை விழிப்புணர்ச்சியுடன் அவன் மனதை விட்டும் தள்ளி வைக்கத் தெரிந்து கொண்டால் இந்த உலகம் அமைதிப் பூங்காவாக உருமாறிவிடும் என்று சொன்னார்.

உண்மையில் வெறுப்பும், பகையும், குரோதமும், வன்மமும் மற்றவர்களிடம் இருப்பதாக நினைத்து அந்த மாயையில் அந்த எதிர்மறை உணர்வுகளை தங்களுக்குள் பலரும் உருவாக்கிக் கொள்கிறார்கள். அது அவன் அமைதியை சூறையாடி அவனுக்குள் பயத்தையும் பலவீனத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. மனிதமனம் மிக ஆற்றல் வாய்ந்தது, பரந்த மனப்பான்மையுடன் மற்றவர்களின் கோணத்தை புரிந்து கொண்டு இந்த உலகம் எந்த பாகுபாடுமின்றி எல்லோருக்கும் பொதுவானது என்று ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒன்றுபட்டு வாழ முற்பட்டால் அங்கு அமைதி நிலைகொள்ளும் உலகம் உன்னதம் அடையும் என்று மேலும் தலாய்லாமா விளக்கமாக கூறினார்.

பல நாட்டு அதிபர்களும், பாரக் ஒபாமா உட்பட பல உலகதலைவர்களும் தங்களுடைய ஆளுமையாக மதிக்கும் மாண்புமிகு தாலாய் லாமா அவர்கள், உலகப் போரில் பகை நாடுகளாக இருந்த நாடுகள் பின் ஐரோப்பிய யூனியன் என இணைந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது போல் அண்டை வீடுகளும் நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதைக் கேட்ட மாணவர்கள் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். பெற்றோர்கள் பெருமிதம் அடைந்தனர்.

ஸ்பேனிஷ், ஜெர்மன், போர்ட்சுகிஸ், மங்கோலியன், ஃப்ரன்ச், இத்தாலியன், சீன, திபெத்தியன், ஹிந்தி, ரஷ்ய, ஜாப்னீஸ், கொரிய, வியட்னாமிய என 14 மொழிகளில் ஒளிபரப்ப பட்ட இந்த இணையவழி நேர்லையை பல லட்சம் பேர் கண்டு சிறப்புற்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது குறித்து (WHD) ன் குளோபல் அம்பாசடரான சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத்திடம் கேட்டபோது, ‘நாளைய உலகம் நம் சந்ததியருக்கு வாழச் சிறந்த இடமாக அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் அடிப்படைக் கொள்கை. அப்படி ஒரு மனிதம் மிகுந்த உலகை உருவாக்க எங்கள் அமைப்பின் மூலம் உலகெங்கும் பல்வேறு பணிகளை எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆற்றி வருகிறார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நாளான செப்டம்பர் 2ம் தேதியை உலக அறநெறி நாளாக (World Moral day) கொண்டாட உலக தலைவர்களுடன் இணைந்து ஒரு குழுவாக செயல்பட்டு ஐ.நா சபைக்கு நாங்கள் பரிந்துரை செய்து வருகிறோம்.

கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு பூசலற்ற புதிய உலகம் படைப்போம்.

அதன் ஒரு வடிவம்தான் இது போன்ற நிகழ்வுகளை நாங்கள் நடத்துவது’ என்று சொன்ன அவர் முத்தாய்ப்பாகக் கூறியது ‘சிறு விதைதானே பெரும் விருட்சமாகிறது’. உண்மைதான்… அமைதி விதை வளர்ந்தால் உலகிற்கே நிழல் கொடுக்கும்.