பர்மா பஜார் குறித்த தவறான செய்திகளால் வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு

Image



சென்னை பர்மா பஜார் பகுதிகளில் திருட்டு செல்போன்களை விற்பனை செய்யும் நபர்களுக்கும் , பர்மா பஜார் வியாபாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தவறான நபர்களை அடையாளம் கண்டறிந்து காவல்துறையில் ஒப்படைக்கும் பணியினை வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பர்மா பஜார் வியாபாரிகள் தெரிவித்தனர்.

( நவ5) சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்க பொதுச்செயலாளர் எஸ். அமீர் ஹம்சா கூறியதாவது......

சென்னையில் கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பர்மா பஜார் இன்று வரை சுமார் 53 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டு காலமாகவே சென்னைக்கு சுற்றுலா வரும் வெளியூர் மற்றும் வெளிமாநில பயணிகள் பலரும் பர்மா பஜாருக்கு வருகைத் தந்து தங்களுக்கு தேவையான பல்வகை பொருட்களையும் வாங்கி செல்வது வழக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு அனைத்து வகை தரமான பொருட்களும் குறிப்பாக செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைத்து வந்ததே அதற்கு காரணம்.

ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி (ஆன்லைன் ஷாப்பிங்) மற்றும் பல்வேறு இடங்களிலும் மொத்த வியாபார கடைகளின் அதிகரிப்பு காரணமாக பர்மா பஜாருக்கு முன்பு போல அதிக அளவிலான மக்கள் வருவது கிடையாது.

இதனால் பஜாரில் உள்ள பல கடைகளில் போதிய அளவில் வியாபாரமின்றி வியாபாரிகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து கொண்டுள்ளனர்.

இத்தகைய நிலையில் பர்மா பஜார் வியாபாரிகள் தொடர்பாக பத்திரிகை ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகும் தவறான செய்திகள் காரணமாக பர்மா பஜார் வியாபாரிகள் மேலும் மேலும் பாதிப்பு அடையக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பர்மா பஜார் பகுதியில் திருட்டு செல்போன் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குறித்த செய்தி வெளியானது. அத்தகைய தவறான செயலில் ஈடுப்பட்ட நபர்களுக்கும் பர்மா பஜார் வியாபாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து எங்கள் சங்கத்தின் சார்பில் காவல்துறையில் ஒப்படைக்கும் பணிகளை பல ஆண்டுகளாகவே செய்து வருகிறோம்.

திருட்டு செல்போன் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் பர்மா பஜார் வியாபாரிகள் கிடையாது. ரவுடிகள் துணையுடன் செயல்படும் ஒரு சில புரோக்கர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது காவல்துறையில் தெரிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதுமட்டுமின்றி பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளுக்கு அவ்வப்போது காவல்துறையினர் மூலமாக வழிகாட்டு நெறிமுறை தொடர்பான கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம். காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான், பர்மா பஜார் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறோம். பர்மா பஜாரில் முன்பு கடை வைத்திருந்த, தற்போது கமிஷன் அடிப்படையில் புரோக்கர்களாக செயல்படும் நபர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் அடையாள அட்டை நற்சான்று வழங்கி உள்ளோம். இவர்கள் மூலம் வாடிக்கையாளர் கள் எவரேனும் பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை பெற்று தருவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இத்தகைய நிலையில்

வியாபாரிகள் அல்லாத வெளி நபர்கள் புரோக்கர்களாக இருந்து செய்யும் திருட்டு செல்போன் விற்பனை உள்ளிட்ட தவறான செயல்களை பர்மா பஜார் வியாரிகளோடு தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட படுவதால் பர்மா பஜார் குறித்த தவறான எண்ணம் பொது மக்களிடம் உருவாகி, அதன் காரணமாக ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், அவர்களது குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே பத்திரிகை ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் முன்பாக திருட்டு செல்போன் விற்பனை செய்யும் தவறான நபர்களின் பின்னணி குறித்து முழுமையாக தீர விசாரித்து சரியான செய்திகளை வெளியிட வேண்டுமென பணிவுடன் கோரிக்கை விடுக்கிறோம். தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவதிலும், அத்தகைய நபர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்கவும் பத்திரிகை ஊடகங்களோடு எங்கள் சங்க நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம். என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அமீர்ஹம்சா தெரிவித்தார். பேட்டியின் போது சங்கத் தலைவர் அப்துல் ரகுமான், துணை செயலாளர் சுகுமாறன், சையது பாய்,ஈவினிங் பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



MGR TV ஹமீது