ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்
ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் ஆலமரம் போல வேர்விட்டு விழுதெறிந்த மிகப் பெரிய சர்வதேச அமைப்பாகும்.
எல்லாரும் வியந்து பார்க்கின்ற இந்த உலக மேடை எவ்வாறு உருப்பெற்றது எனும் கேள்வி எம்மில் பலருக்கு உண்டு என்றால் அது மிகையாகாது. முதலாவது உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பாரிஸ் சமாதான மாநாட்டை(Paris Peace Conference) தொடர்ந்து உலக நாடுகள் சங்கம் " The League of Nations" உருவாக்கப்பட்டது.
இது சர்வதேச இராஜதந்திர குழுக்களால் நாடுகளுக்கிடையேயான மோதல்களை தவிர்ப்பதற்கான ஒரு தீர்வாக கருதப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த அற்புதமான யோசனையை முதன் முதலில் முன் வைத்தவர் அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியான வூட்ராவ் வில்சன் (Woodrow Wilson)ஆவார்.
முதல் உலகப் போரில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னர் 1918 ஜனவரியில் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி வில்சன் அவர்களினால் வழங்கப்பட்ட பதினான்கு புள்ளிகளின் அடிப்படையில் இடம்பெற்ற விளக்கவுரையிலேயே இக்கருத்துக்கள் கோடிட்டு காட்டப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த விவாதத்தை அமெரிக்க மக்களிடம் எடுத்துச் சென்று, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சிக்காக கடுமையாக உழைத்த வில்சன் அவர்களை பக்கவாதம் தாக்கியது. அந்நிலையில் இந்த யோசனை அமெரிக்காவை தவிர்ந்த ஏனைய நாடுகளில் மிகவும் வரவேற்கப்பட்ட ஒன்றாக மாறியிருந்ததால் பிரித்தானியா பாராளுமன்றம் பிலிமோர் குழு (Phillimore Committee) எனும் ஒரு ஆய்வு குழுவை உருவாக்கி தனது ஆதரவை வழங்க, சுவீடன், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், கிரீஸ், செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பிற சிறிய நாடுகளின் தலைவர்களும் தமது ஆதரவை வழங்கினர்.
1919- ம் ஆண்டில் ஒரு கட்டமைப்பும் செயல்வடிவமும் பெற்ற இந்த முயற்சி பாரிஸ் மாநாட்டில் பங்கு பற்றிய நாடுகளினால் ஒரு உடன்படிக்கைக்குள் கொண்டு வரப்பட்டது. ஜனவரி 10, 1920- ல் உலக நாடுகள் சங்கம் ("The League of Nations") முதல் முறையாக 48- நாடுகள் இணைந்து கொள்ள, தனது பயணத்தை மிகுந்த நம்பிக்கையோடு ஆரம்பித்து வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது .
பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நகர்வுகள் மூலம் நாடுகளுக்கு இடையிலான மோதல்களைத் தீர்ப்பது, ஆயுதக் குறைப்பு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தடுத்து மீண்டும் கொடூரமான மரணங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வது, உலகளாவிய நலனை மேம்படுத்துதல் ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. அத்துடன் இதன் பிரதான அங்கமாக சர்வதேச நிரந்தர நீதிமன்றம் நிறுவப் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சர்வதேச சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கான அமைப்பின் தலைமை செயலகம் ஜெனிவாவில் நிறுவப்பட்டது. அது மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் இந்த உறுப்பு நாடுகள் ஜெனீவாவில் கூடி, பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்தன.
சொந்த தனித்துவமான கட்டடம்
மார்ச் 1926 இல் புதிய கட்டிடங்களை வடிவமைப்பதற்கான சர்வதேச கட்டடக்கலை போட்டி ஒன்றை நடாத்தி, அதிலிருந்து ஐந்து சிறந்த கட்டிடக் கலை நிபுணர்களை தெரிந்தெடுத்து தற்போது ஜெனீவாவில் அமைந்துள்ள கட்டடத்தை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தப் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட 377 வடிவமைப்புகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 9 சிறந்த வடிவமைப்புக்கு முதலாம் பரிசு வழங்கப்பட்டமையாகும் . செப்டம்பர் 7, 1929 அன்று Palais des Nations- ல் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட , பிரம்மாண்டமான முறையில் உலக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக கம்பீரத்துடன் வீற்றிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடம் 1936-ல் நிறைவு செய்யப்பட்டு அங்கு தனது பணிகளை ஆரம்பித்தது. அந்த காலப்பகுதியில் இந்த கட்டடத்திக்கான செலவுகள் 29 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை தாண்டிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றியும் இடையூறுகளும்
ஜனவரி 10, 1920 தொடக்கம் ஏப்ரல் 20, 1946 வரை இயங்கிய இந்த சர்வதேச அமைப்பின் உயர்ந்த நோக்கங்கள் நிறைவேறினவா? இந்த கேள்விக்கு பதில் துரதிஷ்டவசமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். சரி, பல வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அமைப்பு தோல்வியடைய என்ன காரணமாக இருந்தது?
இந்த உயரிய நோக்கங்களை அடைவதற்கு அல்லது எந்தவொரு நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதற்கு இந்த சர்வதேச அமைப்பிற்கு சொந்தமாக ஒரு ஆயுதப்படை இல்லாமல் இருந்தது மிகப் பெரிய சவாலாக அமைந்தது என்பதை மறுக்க இயலாது. ஆரம்பத்தில் சிறிய சக்திகளின் அடிப்படையில் சிறிய வெற்றிகளை கண்டாலும், வெற்றி என்பது இறுதியில் பெரும் சக்திகள் என அழைக்கப்பட்ட நாடுகளின் பங்களிப்பை
பொறுத்தே தீர்மானிக்கப்படும். ஆரம்பத்தில் ஜெர்மனியும் ரஷ்யாவும் இணைய முன் வராத நிலையில் அமெரிக்காவும் இணையாதது மிகப் பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, இணைந்த பெரிய சக்திகளான பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் தமது பலத்தை பிரயோகிக்க தயங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜப்பான் இந்த அமைப்பில் இருந்து வெளியேறியதும் மிகப் பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.
அத்துடன் அமைப்புக்குள் இருந்த பொதுவான பலவீனங்களுடன், எடுக்கப்படும் தீர்மானங்களை செயற்படுத்த முடியாத நிலை காணப்பட்டதோடு, வாக்குறுதி எடுத்த பிரகாரம் ஆயுதங்களை களையும் முயற்சி படுதோல்வியில் முடிந்தது. குறிப்பாக முதன்மை நாடுகள் மற்ற நாடுகள் தங்கள் தலை விதியை தீர்மானிக்கும் காரணிகளாக மாறுவதை விரும்பாததால் அந்த நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட விடயங்களை நடைபெற விடாமல் தடுத்தன. மேலும் சக்திவாய்ந்த நாடுகள் சண்டையிட்டு கொள்வதை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை உருவாக இரண்டாம் உலகப் போர் வெடித்தது. இந்த அமைப்பின் தோல்வியும் இரண்டாம் உலகப்போர் வெடிக்க காரணம் என்று பலர் குற்றம் சுமத்துவதை மறுதலிக்க முடியாது.
இறுதி ஒன்று கூடலும் இந்த உலக நாடுகளின் சங்கத்தின் முடிவும் இரண்டாம் உலக யுத்தத்தின் மகா அழிவின் பின்னரும் 43 அரசுகள் இவ்வமைப்பில் அங்கம் வகித்தன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் கடும் தோல்வியில் முடிவடைந்தது மாத்திரமல்ல, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டு பெருமளவு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி உலகத்தையே தலை கீழாக புரட்டிப் போட்ட யுத்தத்தை நிறுத்த இந்த அமைப்பினால் முடியாமல் போய் விட்டது. ஆகவே இந்த அமைப்பின் செயற்பாடுகளை முற்று முழுதாக நிறுத்திக் கொள்வதென முடிவெடுக்கப் பட்டது. இறுதியாக ஜெனீவாவில் ஒன்று கூடிய இந்த அமைப்பு தாங்கள் பயணித்த பாதையில் இருந்து கற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் நிறை குறைகளின் அடிப்படையில் இன்னும் இதை எப்படி காத்திரம் மிக்கதொன்றாக மாற்ற முடியும் என்ற ஆய்வுகளின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றை புதிய நடைமுறைகளுடன் அறிமுகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த அமைப்பினுடைய சகல உடைமைகளும் ஆவணங்களும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கையளிக்கப்பட்டு, உத்தியோகப் பூர்வமாக கலைக்கப்பட்டது.
ராஜி பாற்றர்சன்