ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது 2021

Image



ஸ்கொட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது என்பது ஸ்கொட்லாந்தின் மகன் என்றைழைக்கப்படும் ராபர்ட் பர்ன்ஸ் நினைவாக அவரது பிறந்த நாளன்று ஆண்டுதோறும் ஒரு குழு அல்லது தனிநபருக்கு வழங்கப்படுகிறது.நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொண்டுவரும், பெரும்பாலும் அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற உதவும் நபர்களின் முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் சமூக சீர்திருத்தத்தை வழங்குவதற்கான பணிகள் மற்றும் அப்பணிகளின் மூலம் மற்றவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற, வளப்படுத்த அல்லது மேம்படுத்துவதற்கான முயற்சியில் தியாகம் மற்றும் தன்னலமற்ற சேவையையும் அர்ப்பணிப்பையும் காட்டும் ஒரு குழு அல்லது தனிநபருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகளாவிய மரியாதைக்குரிய ஒரு விருது என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டுக்கான ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மனிதநேய செயற்பாட்டாளர்களின் இறுதி சுற்றுக்கு மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.மூன்று நபர்களுள் ஒருவராக உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையின் களமாகவிருந்த இலங்கையின் இறுதிக்கட்ட யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பணியாற்றிய, இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பலகமம் என்ற சிறிய கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட மனித உரிமை பாதுகாவலராக தமிழர்களிடையே புகழ்பெற்ற மருத்துவ கலாநிதி. வரதராஜா துரைராஜா அவர்களும் இடம்பிடித்துள்ளார் என்பது தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும் மேலும் மனிதாபிமானத்தை போற்றும், அநீதிக்கு எதிராக போராடும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

பொதுமக்களுடன் யுத்த வலையத்தில் தங்கியிருந்து, இரவும் பகலும் உழைத்து, அவசரகால முதலுதவி மற்றும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட சில மருத்துவர்களில் இவரும் ஒருவர். மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் குறைந்து வரும் மருத்துவ பொருட்கள் மூலம் மருத்துவ கலாநிதி. வரதராஜா துரைராஜா மற்றும் அவரது ஊழியர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினர். யுத்தம் தீவிரமடைந்த போது, இடம்பெயர்ந்த மக்களோடு சென்ற அவர் , தொடர்ந்து தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்தி தன்னுயிரையும் துச்சமென எண்ணி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தன்னிகரற்ற சேவை புரிந்தார். யுத்தம் முடியும் வரை அவர் பொதுமக்களுடன் இருந்தார்,.இறுதியில் அவரே காயமடைந்து அரசாங்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டார். பல நாட்கள் சிகிச்சை அளிக்கப்படாத காயங்களுடனும், விசாரணை என்ற பெயரில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார். சர்வதேச அழுத்தம் காரணமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், இலங்கை அரசின் தொடர்ச்சியான உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். . முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் “பாதுகாப்பு வலையத்திற்கு" உட்பட்ட இனப்படுகொலை நிகழ்வுகளுக்கு அவர் அளித்த முதல் சாட்சி,2009 இல் ஈழதமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர்களின் அவலத்திற்குநீதியைப் பெற தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார். 2017 ஆம் ஆண்டில் ஒட்டாவாவில் மருத்துவ கலாநிதி திரு. வரதராஜா துரைராஜா சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து மறைந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் கண்காணிப்பாளருமான பால் தேவர் டாக்டர் .வரதனை "ஒரு செல்வாக்கு மிக்க மனித உரிமை பாதுகாவலராக, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நிகழும்போது பல உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தனக்கு உயிராபத்து ஏற்பட்ட பொழுதும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மருத்துவத்தை கடைப்பிடித்தார்" என பாராட்டினார்.

“பாதுகாப்பு வலையத்திலிருந்து ஒரு குறிப்பு (Note From The No Fire Zone)" என்ற தலைப்பில் அவரது நினைவுக் குறிப்பு 2019 மே மாதம் வெளியிடப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் அவலங்களை பிரதிபலிக்கும் வகையில் பொய்யாவிளக்கு என்ற ஆவணப்படமும் அவரது நடிப்பில் வெளியிடப்பட்டுள்ளது அமெரிக்காவில் மீண்டும் தனது மருத்துவ பயிற்சியைத் தொடர முயற்சித்துக் கொண்டிருக்கும் அவர், மோதல் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டுவருவதற்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார். இவ்விருது குறித்து மருத்துவ கலாநிதி திரு. வரதராஜா துரைராஜா அவர்கள் “இந்த அற்புதமான விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது மருத்துவ அனுபவங்களால் நான் ஒரு மனித உரிமை ஆர்வலர் ஆனேன். நான் ஒரு மருத்துவரானபோது, அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த யுத்த வலய பகுதிகளில் பணியாற்ற விரும்பினேன். சமூகத்திற்கு நான் செய்த சேவைகளை அங்கீகரித்து எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

RBHA தீர்ப்புக் குழுவின் தலைவரும், தெற்கு அயர்ஷயர் கவுன்சிலின் தலைவருமான பீட்டர் ஹென்டர்சன் “எப்போதும் போல, பரிந்துரைக்கப்பட்டவர்களின் திறமை மிக அதிகமாக இருந்தது. இறுதி மூவரை தீர்மானிப்பது மிகுந்த கடினமாக இருந்தது.ஆனால் இந்த மூவரும் வெற்றியாளராக பிரகாசித்தனர். அவர்கள் அனைவருமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர், அவர்களின் சேவை மனிதகுலத்துக்கு மிகசிறந்த ஒரு உத்வேகம். வெற்றியாளர் அறிவிக்கப்படும் இறுதி நாளான 2021 ஜனவரி திங்கள் 25 திகதியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அகிம்சை போராட்டம் பயனளிக்காமல் போக ஆயுத போராட்டம் ஆரம்பித்து அதுவும் முள்ளிவாய்க்காலில் முடிந்து போக , நடந்து முடிந்த இனப்படுகொலைக்கான நீதியை பெறுவதற்கும் ,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதிலையும் , மிஞ்சி இருக்கும் ஈழ தமிழர்களின் இன்றைய மற்றும் எதிர்காலத்தையும் , அடிப்படை உரிமைகளையும் சரியான முறையில் பெறுவதற்கு இந்த விருது ஒரு படிக்கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழினத்தை பொறுத்தவரை இது ஒரு தனிமனிதனை முன்னிலைப்படுத்தும் விடயமல்ல. டாக்டர் வரதன் அவர்களை ஒரு கருவியாக கொண்டு உலக அரங்கில் முள்ளிவாய்க்கலை முன்னிறுத்தும் ஒரு முயற்சி.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் கடைசியில் தர்மமே வெல்லும்’.

இதை எந்த சக்தியாலும் மாற்றவே முடியாது. உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்ற கூற்று மெய்ப்பட தொடங்கியுள்ளதை இந்த வெற்றி பறைசாற்றுகிறது. வெற்றியாளராக வாகை சூட மருத்துவ கலாநிதி . வரதராஜா துரைராஜா அவர்களை நாமும் வாழ்த்தி , மேலும் இதை முன்னெடுத்த , ஆதரவு வழங்கி துணை நின்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குவோம்.

Raji Patterson