நம்பிக்கை

Image


நான் அந்தக் கம்பெனியை மிகவும் நம்பி தானே சீட்டு கட்டினேன்.. இப்படி நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்களே…

நெருங்கிய உறவு என்று தானே நம்பி அவசர நேரத்தில் இவ்வளவு பண உதவி செய்தேன் ஆனால் இப்படி ஏமாற்றி விட்டார்களே..

நல்ல நண்பர் என்று தானே என் மனதில் கிடந்த பாரங்களை இறக்கி வைத்தேன். இது உனக்கும் எனக்கும் இரகசியமாக இருக்கும் என்று அவ்வளவு சொல்லி என் மனபாரத்தை எல்லாம் இறக்கி வைக்க தூண்டி விட்டுவிட்டு, இப்படி ஒன்றிற்கு இரண்டாக வெளியே சொல்லி பிரச்னையை ஏற்படுத்தி விட்டார்களே.. இப்படி ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்ற சாகா வரம் பெற்ற பாடலை வாழ்வில் ஒரு முறையாவது முணுமுணுக்காதவரே இருக்க முடியாது எனலாம். பளபள விளம்பரங்களும் பகட்டான பரிசுகளையும் நம்பி தகுதிக்கு மீறி பணம் கொடுத்து வாங்கி வரும் பொருட்கள்தான் தரமில்லாமல் போகிறதென்றால் கஷ்டப் பட்டு சேமித்து பணம் கட்டும் நிறுவனங்களும் காலைவாரி விடுகின்றன. இதெல்லாம் போதாதென்று நெருங்கிப் பழகும் உறவுகள் நட்புகள்கூட நம்பிக்கையை பொய்யாக்கி சுய நலத்துடன் நடப்பதையும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது என பல நேரங்களில் வாங்கும் பொருட்களிலிருந்து பழகும் நபர்கள் வரை இன்றைய உலகமே ஒரு அவநம்பிக்கையால் கட்டமைக்கப் பட்டது போல மாறிக் கொண்டிருப்பது போல் ஒரு மாயை எழும்.

இனி வாழ்க்கையில் யாரையும் நம்பி விடக் கூடாது என்பதில் நான் மிக முடிவாக இருக்கிறேன் நான் நம்பியவர்கள் எல்லோரும் ஏமாற்றி விட்டார்கள். என நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாக உடைந்து விட்டது. இனி எப்படி என்னால் யாரையும் நம்ப முடியும் என சமுகத்தின் மீதும் கோபமும் தன் மீது ஆற்றாமையும் இயலாமையும் ஏற்படும். முதலில் நம்பிக்கை என்பது ஒரு பொருள் அல்ல அது சுக்கு நூறாகவோ அல்லது இஞ்சி ஆயிரமாகவோ உடைவதற்கு. நம்பிக்கை என்பது உங்களுக்குள் ஏற்படும் ஒரு மனநிலை. பொதுவாக எந்த விஷயத்தையும் ஒன்று மனம் துறுவித் துறுவி ஆராய்கிறது அல்லது முழுவதுமாக நம்பி ஆழ்மனம் எழுப்பும் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்து விட்டு அல்லும் பகலும் தவிக்கிறது. என்ன தான் பட்டம் வானத்தில் பறக்க வேண்டுமென்று அதை வானில் பறக்க விட்டாலும் அது திரும்பி தன் கைகளுக்குள் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அதன் ஒரு நுனியை தன் கையில் பிடித்து தன் முழு கவனத்தையும் அந்த பட்டத்தில் வைத்து அது வேறு எதிலும் சிக்கி தன் கையை விட்டும் நழுவி விடக் கூடாது என்று தான் பல நேரங்களில் இருக்க வேண்டி இருக்கிறது. அதை விட்டும் அதை வானில் பறக்க விட்டு அதுவே தானே வந்து விடும் என நினைத்து கேட்பாரற்று இருக்க செய்து பின் யாரையும் எந்த வகையிலும் நம்ப மாட்டேன் என்றே மனம் அரற்றுகிறது என என்னென்னெவோ எல்லாம் முடிந்த பின் தோன்றுகிறது. எந்த ஒரு சூழலிலும் மிக விழிப்புணர்ச்சியோடு யார் சொல்கிறார்கள், அவர்கள் எந்த உடையில் இருக்கிறார்கள், எவ்வளவு ஆழமாக சொல்கிறார்கள் என்பதை எல்லாம் தாண்டி எந்த அடிபடையில் சொல்கிறார்கள் என்று அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து செயல்படுபவர்கள் வெற்றியாளர்களாக மன அழுத்தம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்கிறது வாழ்வியல்.

நியூஜெர்ஸியில் இது சம்பந்தமாக ஒரு நீண்ட ஆய்வு நடத்தப் பட்டது, அதன் ஒரு பகுதியாக ஒரு கார் நிறுத்துமிடத்தில் வாடிக்கையாளர்கள் கார்களை நிறுத்த வரும்போது அங்கு காரை நிறுத்தக் கூடாது என்று கூறும்படி சில வாலன்டியர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் சாதாரண உடையில் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சொல்வதாகவும் பின்பு செக்யூரிட்டிகளுக்கான சீருடை அணிந்து கொண்டு சொல்வதாகவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சாதாரண உடையில் சென்று சொல்லும்போது பொருட்படுத்தாத வாடிக்கையாளர்கள்கூட சீருடையில் சொல்லும்போது எதிர்ப்புக் காட்டாமல் சென்று விட்டார்கள். அதே சமயம் சீருடை இல்லாமல் சொல்லும்போதும் ஒரு செக்யூரிட்டையப் போல இருக்கமான தோரணையுடன் இருந்த வாலன்டியர்கள் சொல்வதைக் கேட்ட வாடிக்கையாளர்கள் அவர்கள் சொன்னதை எதிர் கேள்வி இல்லாமல் கேட்டு கார்களை நிறுத்தாமல் சென்று விட்டனர். இதே போன்று விற்பனை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஆராய்ந்து அதன் முடிவாக எது ஒன்றையும் உங்களை நம்பச் செய்வதற்கு மூன்று அடிப்படை விசயங்கள் முதன்மையாக இருக்கிறது என வலியுறுத்துகிறது இன்னும் பல ஆயுவுகள். அதாவது சொல்லும் செய்திக்குப் பொருத்தமான தோற்றம் மற்றும் அதைப் பிரதிபலிக்கும் உடை, தவிர மீண்டும் மீண்டும் சொல்லப் படும் ஒரு விஷயம். இந்த மூன்று விசயங்கள்தான் உங்கள் மனதை உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து பிரித்து உங்கள் ஆழ்மனம் கூறும் எச்சரிக்கைகளை எல்லாம் புறந்தள்ளி உங்களை ஒரு நபரையோ அல்லது எந்த செய்திகளையுமோ தகுந்த காரணம் இல்லாமல் நம்பச் செய்கிறது என்கின்றன அந்த ஆய்வுகள். அதே ஆய்வின்போது வெளிப்பட்ட இன்னொரு முடிவும் மிக முக்கியமானது அதாவது ஆய்வின்போது அனுகப் பட்ட வாடிக்கையாளர்களில் வெற்றிப் பின்னனியில் இருந்தவர்கள் எந்த நிலையிலும் ஆய்வாளர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளவில்லை அவர்கள் கூறப் பட்ட விசயங்களுக்கான ஆதாரத்தைக் காட்ட சொன்னார்கள்.

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று வள்ளுவர் கூறியது வெறும் மதிப்பெண்களுக்கான படிப்பல்ல. அதுவே உங்கள் வாழ்வியல் பாடம் என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கிறது இந்த ஆய்வின் முடிவு. நம்பிக்கை என்பது பிற மனிதர்கள் மீதோ அல்லது நிறுவனங்கள் மீதோ அல்லது பொருட்கள் மீதோ வைக்கப் படுவது அல்ல, மாறாக உங்கள் ஆழ்மனதின்மீது வைக்கப்பட வேண்டியது

நம் உடல் உறுப்புகளிலிருந்து, நம் ஆழ்மனம், நம் சமுகம் இந்த பிரபஞ்சம் எல்லாமே ஒன்றோடொன்று பின்னப் பட்டு ஏதாவது ஒரு வகையில் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது என்கிறது ஆழ்மன இயல். ஒரு சில எதிர்மறையான நிகழ்வுகள் உங்கள் மேல் உள்ள தன்னம்பிக்கையையும் இந்த சமூகத்தின் மேல் உள்ள ஒட்டு மொத்த நம்பிகையையும் இழக்க அனுமதிக்காதீர்கள். அது உங்களுக்கான உலகத்தையும் உங்கள் எதிர்காலத்தையும் அப்படியே சுருக்கி விடும். தவிர உங்கள் உள்ளுணர்வு உங்களுக்குக்கான வழிகாட்டி. நீங்கள் உங்கள் உள்ளுணர்வை சரியாக கவனிக்காமல் இருந்த தருணங்களில் தவறான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். உங்கள் அனுகூலங்கள் தவறாக போனதை வைத்து, நீங்கள் நம்பியவர்கள் உங்கள் நம்பிக்கைக்கேற்ப நடந்து கொள்ளாததை நினைத்து உங்கள் ஆழ்மனம் என்ன சொன்னாலும் அதை உங்கள் மனம் நிராகரித்து செயலற்று இருக்க முனையும். அப்படி நீங்கள் ஒட்டு மொத்தமாக உங்கள் ஆழமனதை உங்களுக்கான சரியான வழிகாட்டியையே ஒதுக்கி வைத்து விட்டால் அது பல கதவுகளை அடைத்து விடும். உங்களுக்கான சரியான நம்பிக்கையான நபர்கள் அடையாளப் படுத்தக் கூடிய வகையில் உங்கள் ஆழ்மனதை நேர்மறையான சிந்தனைகளால் நிரப்புங்கள். அது உங்கள் மனதின் இறுக்கத்தைக் குறைக்கும். மகிழ்ச்சி நிலைக்கும்

பாக்ஸ் மெஸேஜ்:-

'இறைவனை நம்புங்கள், ஒட்டகத்தை கட்டி வையுங்கள்' என்று ஒரு அரபு நாட்டுப் பழமொழி உண்டு. எவ்வளவு நம்பகமான ஒட்டகமாக இருந்தாலும் இறைவன் பாதுகாவலில் தான் விடுகிறீர்கள் என்றாலும் அததற்கு செய்ய வேண்டிய முறைகளை செய்து விட வேண்டும் அதன் பின் மனதை போட்டு சலனத்திற்கு ஆளாக்காமல் நிம்மதியாக இருங்கள் என்பது தான் அதன் அர்த்தம். அதனால் முழுமையாக யாரையும் இனி நம்பக் கூடாது என்று முடிவுக்கு வருவதை விட்டும் எந்த இடத்தில் தவறாக போனது என்ன செய்திருந்தால் இந்த மாதிரி நடக்காமல் தடுத்திருக்கலாம். இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது எது என கொஞ்சம் நடந்தவைகளை ஒவ்வொரு கட்டமாக அலசிப் பாருங்கள். எந்த சூழல் வரை சரியாக எல்லாம் போய்க் கொண்டிருந்தது.. எந்த இடத்தில் சருக்கியது.. எது சருக்க செய்தது என்பது சரியாக பிடிபடும் போது அதை விழிப்புணர்ச்சியோடு அனுகும்போது, தீர்வுகள் இலகுவானதாக இருக்கும். தவிர ஏதாவது ஒரு வகையில் அது தீர்க்க முடியாதாதாக இருந்தாலும் மனம் அதை ஏற்றுக் கொண்டு மாற்றுத் தீர்வை பற்றி சிந்திக்கும்.

Dr.Fajila Azad