கல்வி தந்தை, கர்மவீரர் காமராஜரின் 118 வது பிறந்த தின கொண்டாட்டம்

Imageதுபாய் : புதுவை ‘கவிதை வானில் கவிமன்றம்’ மற்றும் கனடா நாட்டின் ‘சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு’ இணைந்து நடத்திய, ‘இந்தியா ப்ரைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ காமராஜர் பிறந்த தின 118 மணி நேர தொடர் ‘உலக சாதனை முத்தமிழ் அரங்கம்’ உலகெங்குமிருந்து பங்கெடுத்த தமிழ் ஆர்வலர்களினால் மிக சிறப்பாக நடந்தேறியது. கடந்த ஜூலை 16ம் தேதியன்று காலை 8 மணியளவில் துவங்கிய நிகழ்வு 20ம்தேதி காலை 8 மணி வரை இடைவிடாது தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிகரமாய் நிறைவடைந்தது. கவிதை, கவியரங்கம், வாய்பாட்டு, இசைக் கருவி பாட்டு, நடனம், கலந்துரையாடல், நாட்டுப்புறப்பாட்டு, பொம்மலாட்டம், பறை, ஒயிலாட்டம், ஓவியம், வினாடி வினா, என பல கலை வடிவங்களில் பாரத ரத்னா விருது வென்ற திரு. காமராஜரை போற்றி நிகழ்ச்சிகள் வழங்கினர் பன்முக திறமைப் படைத்த தமிழர்கள். பத்து ஒருங்கிணைப்பாளர்கள், ஒருவருக்கு எண்பது பங்கேற்பாளர் வீதம் பல ஊர்களிலிருப்போரை தொடர்பு கொண்டு பத்து மணி நேர நிகழ்ச்சிக்கான நிரலை தயார் செய்து, பொறுமையுடன் நேரம் ஒதுக்கி, ஐம்பத்தி ஒரு மணி நேர நிகழ்வாக தொடங்கிய நிகழ்வினை, பங்கெடுப்போரின ஆர்வம் கருதி, பின் எழுபத்தி ஐந்து மணி நேரம், பின் நூற்றி பதிணெட்டு மணி நேரம் என ஏறத்தாழ ஆயிரம் பேர் பங்குகொண்ட நிகழ்வாக நிறைவடைய செய்தனர். அமீரகததுடன் இணைந்து பணியாற்றிய தமிழக ஒருங்கிணைப்பாளர் தங்க கல்யாணியின் பணி மிகவும் உற்சாகமளித்தது.

உலகின் பல ஊர்களிலிருந்தும், ஆசிரியர்கள், முனைவர்கள், இல்லத்தரசிகள், பாடகர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், சிறு குழந்தைகள், மூத்த தமிழர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அமீரக தமிழர்களும் குறைவில்லாமல் ஈத் பெரு நாளின் நீண்ட விடுமுறையை பயன் படுத்தி, மூன்று நாளும் இயன்றவரை பங்கு கொண்டனர். ஏழு வயதே ஆன ஷ்ரவனின் தேச பக்தி பாடலில் துவங்கி, வேதாரம் பரத்வாஜ், ஷ்யாம் மணிகண்டன் பாடிய காமராஜர் குறித்த சிறப்பு பாடல்கள், ஓவியா ப்ரகாஷ் வரைந்த திரு.காமராஜரின் அழகு ஓவியம், அமீரகத்தின் சிறப்பு பேச்சாளர் பிரியா கதிர்வேல், சிறுமி அபர்ணா, மற்றும் விவேகா போன்றோரின் சிறப்புரை, ஆடலரசன் நடராஜன் அவர்களின் கவிதை மேலும் பல குழந்தைகளின் பாடல்கள் என நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர். பங்கு கொண்ட அனைவருக்கும் மன்றங்களின் சார்பில் தமிழிலும், சாதனை நிகழ்வின் சார்பில் ஆங்கிலத்திலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இத்தகைய அரிய நிகழ்வினை உருவாக்கம் செய்த புதுவை திருமதி கலா விசு, கனடா நாட்டின் திருமதி ராஜி பேட்டர்சன், நிகழ்ச்சிக்கு இசை மாணவர்களை தந்து உதவிய அமீரக இசை ஆசிரியைகள் ரேணுகா ஷர்மா, அனந்தலஷ்மி மற்றும் அமீரகத்திலிருந்து பங்கு கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து இத்தகவல்களை பகிர்ந்து கொண்டார் நிகழ்ச்சியின் அமீரக ஒருங்கிணைப்பாளர்/ இணைய நெறியாளர் ரமா மலர்.