அதிகளவில் ரத்த தானம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு குவைத் இந்திய தூதர் பாராட்டு

Imageஉலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 ஆம் தேதி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களின் ரத்த வகையை அறிந்து கொள்வதோடு, "உயிர் காக்க உதிரம் (ரத்தம்) கொடுக்க வேண்டும்" என்பதே இதன் நோக்கம்.

அறுவை சிகிச்சை மற்றும் விபத்துக் காலங்களில் ரத்தம் தேவைப்படுவோருக்கு எவ்வித தடையும் இன்றி ரத்தம் கிடைக்க, தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிப்பதே சிறந்த வழியாகும். ஆரோக்கியமாக உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தாராளமாக ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் போதுமானதாகும். ரத்த தானம் செய்யும் குருதி கொடையாளரிடம் இருந்து சுமார் 300 மில்லி ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. ஒவ்வொரு யூனிட் ரத்தம் 4 உயிர்களை சேமிக்க உதவுகிறது. ரத்தக் கூறுகளான ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, ரத்தத் தட்டுகள் தேவைப்படுவோருக்கு வழங்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் ஒவ்வொரு யூனிட் ரத்தமும் பாதுகாப்பு கருதி ஹெச்.ஐ.வி, மஞ்சள் காமாலை, பால்வினை நோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கான கட்டாய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பரிமாற்றம் செய்யப்படுகிறது.

தன்னார்வமாக ரத்த தானம் செய்வோருக்கு குவைத் மற்றும் இந்திய அரசுகள் சார்பில் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உலக ரத்த கொடையாளர் (World Blood Donor Day) தினத்தையொட்டி, ஐந்துக்கும் மேற்பட்ட முறைகள் ரத்த தானம் செய்த இந்திய தன்னார்வ ரத்த கொடையாளர்கள் 70 பேருக்கும், ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்த 30 இந்திய அமைப்புகளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் விழா குவைத் இந்திய தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14, 2022) நடைபெற்றது.

இதில், இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தலைமை வகித்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) உள்ளிட்ட 30 இந்திய அமைப்புகளுக்கு நினைவுப் பேழைகளையும், தன்னார்வ ரத்த கொடையாளர்களான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ மற்றும் சேவைக்குழு செயலாளர் நீடுர் கே. முஹம்மது சித்தீக் உள்ளிட்ட 70 பேருக்கு சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் நினைவுப் பேழையை துணைத் தலைவர் அதிரை எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, ஊடகச் செயலாளர் விஜயபுரம் ஏ. நிஜாமுத்தீன் மற்றும் சேவைக்குழு செயலாளர் நீடுர் கே. முஹம்மது சித்தீக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

'இரத்த தானத்தின் பின்னால் உள்ள அறிவியல்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் இரத்த தானம் செய்வதால் இரத்த தானம் செய்பவருக்கும், பெறுபவருக்கும் ஏற்படும் நன்மைகளை இந்திய மருத்துவர்கள் அமைப்பின் (IDF) மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

வினாடி வினா போட்டிகள், மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவ் விழாவில், குவைத் இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய மருத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள் பலர் பங்கேற்றனர்.