பஹ்ரைன் நாட்டில் இசை நிகழ்ச்சி

Image



மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள பான் சாங் தாய் ஆடிட்டோரியத்தில் பூர்ணா கார்ப்பரேசன் நிறுவனத்தின் இசைக்குழுவான உதய கீதம், பாடகர் பத்மவிபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளான 04 ஜூன் 2022 அன்று அவரின் நினைவாக முதல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தொடக்கமாக பாரம்பரிய முறைப்படி குத்து விளக்கு ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடகர்கள் பாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிரவுன் எலக்ட்ரோ மெக்கானிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இனயதுல்லா கலந்து கொண்டார். இந்த விழாவில் மோக்ஷத்வாரா அறக்கட்டளையின் நிறுவனர் சமூக சேவகர் ராதாகிருஷ்ணன் யுவராஜ் அவர்களுக்கு பூர்ணா கார்ப்பரேசன் சார்பில் 'சேவா ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவர் கொரோனா பாதிப்பு சமயத்தில் கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் இறந்த 3,465 பேரின் இறுதிச் சடங்குகளை இலவசமாக செய்தார். இதனால் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் சமூக ஆர்வலர் நாகர்கோவில் செய்யது ஹனீஃப் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பூர்ணா கார்ப்பரேசன் நிறுவனம் பஹ்ரைனை தலைமை இடமாகக்கொண்டு 2016 முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும், தமிழ்நாட்டின் சென்னையிலும் இயங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்ட அதன் நிறுவனர்கள் தமிழ் சமுதாயத்திற்காக கலை நிகழ்ச்சிகள் பலவற்றை 2016 முதல் நிகழ்த்தி வருகின்றனர். இந்த நிறுவனம் திருமண நிகழ்வுகள், அரசு மற்றும் தனியார் நிறுவன நிகழ்வுகள், அரசு விழாக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நிகழ்ச்சிகள், இசை கச்சேரி இன்னும் பலவற்றை நடத்தி வருகிறது.