வந்தவாசியை சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேஷூக்கு மேனாள் ஆளுநரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு

Imageவந்தவாசி. அக்.03. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான மு.முருகேஷின் சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்கான பங்களிப்பைப் பாராட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில் மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.

அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் சிறுவர்களுக்கான ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் தலைமையேற்றார். க.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில், சிறுவர் இலக்கியப் படைப்பிலக்கியங்களை கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் மு.முருகேஷின் பங்களிப்பைப் பாராட்டி, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.

வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் கலை இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கவிஞர் மு.முருகேஷ், இதுவரை 50-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,கட்டுரை, சிறுவர் இலக்கியம், விமர்சன நூல்களைப் படைத்துள்ளார். தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். 2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருதினை தனது ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலுக்காகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், வங்காளம், ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின் அழைப்பின் பேரில் அங்கு சென்று, உரையாற்றி வந்துள்ளார்.

இவரது படைப்புகளை இதுவரை 8 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.

சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகி, தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கவிதா பதிப்பக உரிமையாளர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிறைவாக, க.மாலதி நன்றி கூறினார்.

படக்குறிப்பு:

சென்னையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழாவில், சிறுவர் படைப்பிலக்கியப் பங்களிப்புக்காக எழுத்தாளர் மு.முருகேஷூக்கு மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார். அருகில், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், சேது சொக்கலிங்கம், ஆயிஷா இரா.நடராசன், க.நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.