அபுதாபியில் மஸ்னவி ஷரீஃப் வெளியீட்டு விழா

Image



அபுதாபி : அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் பாரசீக அறிஞர் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ( ரஹ்மத்துல்லாஹி அலை) எழுதிய மஸ்னவி ஷரீஃப் தமிழ் மொழியில் ஏழு பாகங்களாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த நூல் வெளியீட்டு விழா நடந்தது.

இந்த விழாவுக்கு அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி தலைமை வகித்தார். தொடக்கமாக இறைவசனங்களை காயல் ஹாபிழ் குத்புதீன் ஆலிம் ஓதினார். அபுதாபி அய்மான் சங்க துணைத் தலைவர் ஆவை முகம்மது அன்சாரி முன்னிலை வகித்தார்.

துபாய், சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மஸ்னவி ஒரு ஞானக் கருவூலம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் மஸ்னவியின் சிறப்புக்கள் குறித்தும், அதனை ஒவ்வொருவரும் அணுக வேண்டிய விதம் உள்ளிட்டவை குறித்து விவரித்தார். இந்த நூலை முழுமையாக வாசிப்பதன் மூலம் இம்மைக்கும், மறுமைக்கும் நமது வாழ்வை பயனுடையதாக ஆக்கி கொள்ள முடியும் என்றார்.

இந்திய முஸ்லிம் பேரவையின் மீரான் ஃபைஜி, அய்மான் சங்கத்தின் நிர்வாகக்குழு செயலாளர் ஆடுதுறை முஹைதீன் அப்துல் காதர், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் அஹமது இம்தாதுல்லா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். அஹமது ஜலால் ஃபஹீமி நன்றியுரை நிகழ்த்தினார். நிறைவாக கலீலுர் ரஹ்மான் பிலாலியின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த நூல் மொழிபெயர்ப்புக்கான ஏற்பாடுகளை சென்னை ஃபஹீமிய்யா டிரஸ்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.