அபுதாபியில் நடந்த ஜாயித் சாரிட்டி ஓட்டப்பந்தயத்தில்
மூன்றாவது இடம் பெற்ற தமிழக வீரர்
அபுதாபி : அபுதாபியில் நடந்த ஜாயித் சாரிட்டி ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடத்தை தமிழக வீரர் செய்யது அலி பெற்றார்.
அபுதாபியில் உள்ள ஜாயித் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் 'ஜாயித் சாரிட்டி ஓட்டப்பந்தயம்' நடந்தது. இந்த ஓட்டப்பந்தயமானது அபுதாபி ஆட்சியாளரின் அல் தப்ரா பகுதிக்கான ஆட்சியாளரின் பிரதிநிதி ஷேக் ஹம்தான் பின் ஜாயித் அல் நஹ்யான் ஆதரவுடன் நடந்தது.
இந்த போட்டி 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயமும் நடந்தது. இந்த போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் 10 கிலோ மீட்டர் பிரிவில் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மூன்றாவது இடத்தை பெற்று சாதனை படைத்தார். அவருக்கு அபுதாபி விளையாட்டு கவுன்சில் அதிகாரி பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் தொகையானது அபுதாபி ஸ்டெம் செல் செண்டர் மருத்துவ மையத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஓட்டப் போட்டியில் சிறப்பிடம் பெற்று வரும் செய்யது அலிக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் அமீரகப் பிரிவு நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால் முஹைதீன், சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.