கட்டமைப்பு மிக்க திருக்குர்ஆன்!

Image



ரமலான் மாத கடைசி 10 நாட்களின் ஓர் ஒற்றைப் படை இரவில் தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. இந்த புனித இரவு ரமலானின் கடைசியான 29ம் இரவான இன்றிரவாகக் கூட இருக்கலாம்.

திருக்குர்ஆனை ரசனையோடு வாசித்தறியும் வகையில், இக்குர்ஆன் ஓர் உன்னத கட்டமைப்பு கொண்டிருக்கிறது.

கூறுவீராக பொருள் தரும் ‘குல்’ என்ற வார்த்தையை 332 தடவை கையாளும் திருக்குர்ஆன், ‘மனிதனுக்கு’, ‘மலக்குகளுக்கு‘, ‘ஜின் இனத்துக்கு’ என்று பொருள்படும் ‘மினல் பஷரி, மினல் மலா இகத்தி, மினல் ஜின்னி’ வார்த்தைகளை மொத்தம் 332 தடவைகள் கையாள்கிறது. ‘மூன்று இனத்துக்கும் கூறுவீராக’ என்று முகம்மது நபிகளாருக்கு கட்டளையிடுவதைப் போல் இது இருக்கிறது.

நல்லவர், கெட்டவர் இருவருக்குமே கருணை காட்டுபவன் பொருளிலான ‘ரஹ்மான்’ வார்த்தையானது, திருக்குர்ஆனில் 57முறை இடம்பிடித்திருக்கிறது. நல்லவருக்க மட்டும் மறுமையில் கருணை காட்டுபவன் எனக்குறிக்கும் ‘ரஹீம்’ வார்த்தை 144 தடவைகள் இடம்பெற்றுள்ளன.

உண்மையான அடியார்கள் மீதான இறையன்பு இருமடங்காவதையே இது காட்டுகிறது. இத்துடன், இறைவனின் மெய்யன்பே குர்ஆனின் 114 அத்தியாயங்களாக உருவெடுத்திருப்பதையும் குறிக்கிறது.

திருக்குர்ஆனில் ‘இப்லீஸ்’ என்ற சொல் 11தடவை இருக்கிறது. இதற்கு ஈடாக, அவனின் ‘தீ்ங்கைக் காக்க இறை உதவியை நாடுங்கள்’ என்ற கட்டளையும் 11இடங்களில் இருக்கிறது. ‘செயல்’ பொருள் தரும் ‘ஃபஅவுல்’ சொல்லை 108 தடவை உபயோகிக்கும் திருக்குர்ஆன், ‘கூலி’ பொருள் தரும் ‘அஜ்ரு’ வார்த்தையை அதே 108தடவை கையாண்டு செயலுக்குத் தக்க சரியான பலனை இறைவனே தருவான் என்பதை உணர்த்தி நிற்கிறது. ‘ஸப்அ ஸமாவத்’ என்ற வார்த்தை 7வானங்கள் குறிப்பதாகும். இவ்வார்த்தை திருக்குர்ஆனில் 7 இடங்களில் மட்டுமே வருகிறது.

‘மாதம்’ என்பதைக் குறிக்கும் வார்த்தை ‘ஷஹ்ரு’ என்பதாகும் இது 12 தடவைகளும், ‘நாள்’ என்பதைக் குறிக்கும் ‘யவ்மு’ என்ற வார்த்தை 365 தடவைகளும், இரு நாட்கள், பல நாட்கள் பொருள் தருகிற ‘யவ்மய்னி அய்யாமு’ எனும் வார்த்தை 30இடங்களிலும் இடம் பெற்று ஒரு நாள், வார, மாத, ஆண்டுக் கணக்கீட்டை கண்களுக்குக் காட்டுகின்றன. மேலும் ‘ஈமான்’ என்றால் மனஉறுதியைக் குறிக்கும். இச்சொல்லை 25இடங்களில் உபயோகிக்கும் திருக்குர்ஆன், அதற்கு எதிர்ப் பதமாகிய ‘குஃப்ரு’ என்ற வார்த்தையை அதே 25இடங்களில் மட்டுமே சமமாக உபயோகித்து சிந்திக்க வைக்கிறது. ‘மலாஇகத்’ என்ற வார்த்தையை திருக்குர்ஆன் 68 இடங்களிலும், ‘ஷைத்தான்’ என்ற வார்த்தையை 68 இடங்களிலும் திருக்குர்ஆன் சமமாக கையாள்கிறது.

இது மனிதனை தன் வழிப்படுத்திட இவ்விரண்டு சக்திகளும் சம பலத்துடன் போராடுகி்னறன என்பதைச் சுட்டிக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவ்வுலகத்தைக் குறிக்கும் ‘துன்யா’ என்ற வார்த்தை 115 இடங்களிலும், மேலுலகத்தைக் குறிக்கும் ‘ஆகிரத்’ என்ற வார்த்தை 115 இடங்களிலும் திருக்ககுர்ஆனில் இடம்பெற்றுள்ளது.

இது இவ்வுலகம் இருப்பது எந்த அளவு உண்மையோ, அந்தளவு மறு உலகமிருப்பதும் உண்மையே, எனவே மறு உலக வாழ்விற்கென தீமைகள் தவிர்த்து, நன்மைகள் புரிவது அவசியம் என்பதைக் காட்டி நிற்கிறது. நான்கு வகை வேதங்களே நபிமார்களுக்கு வழங்கப்பட்டதாகும். இத்துடன் சிற்சில சட்டங்கள் அடங்கிய 110 ‘சுஹ்புகள்’ உள்ளன. இத்தனையும் திருக்குர்ஆனில் அடக்கம் என்பதைக் காட்டும் விதத்தில் திருக்குர்ஆன் 114 அத்தியாயங்கள் கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக ஆராய்ந்தால், இந்த 114 அத்தியாயங்களின் கருத்துகளும் ‘சூரத்துல் பாத்திஹா’ என்ற ஒரு பகுதிக்குள் அடக்கம் என்பதை காட்டும் விதத்தில், இந்த சூரத்துல் பாத்திஹாவை 114 எழுத்துக்களில் அல்லாஹ் அமைத்திருப்பது அறியப்படுகிறது. இதுபோலவே, இந்த 114 அத்தியாயங்கள்தான் ‘உண்மைக் கல்வி’ என்பதை விளக்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் ‘எனது இறைவா எனக்கு கல்வியை அதிகப்படுத்து என்று கூறுவீராக’ என்ற கருத்தை உள்ளடக்கிய ‘வ குர்ரப்பி ஸித்னி இல்மா’ என்ற திருவசனத்தை 114வது வசனமாக இறைவன் திருக்குர்ஆனில் இடம்பெறச் செய்திருப்பதும் வியப்பு நிறைக்கிறது.

இன்னும், ‘பிஸ்மில்லாஹ்’வின் எழுத்துகள் 19, திருக்குர்ஆனில் 114 இடங்களில் ‘பிஸ்மில்லாஹ்’ இடம்பிடித்திருக்கிறது. இந்த 114ஐ, 19ஆல் மீதமின்றி வகுத்திட முடியும். மேலும், ‘பிஸ்மில்லாஹ்’வில் இடம்பெறும் இறைவனின் 3பெயர்களும், திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை இடங்களில் வருகின்றதோ அவைகளை 19ஆல் மீதமின்றி வகுக்கலாம். ‘அல்லாஹ்’ 2698 இடங்களிலும், ‘ரஹீம்’ 114 இடங்களிலும், ‘ரஹ்மான்’ 57 இடங்களிலும் வருகின்றன.

அத்தனையும் மீதமின்றி வகுபடுகி்ன்றன. திருக்குர்ஆனின் ஒவ்வொரு பகுதியின் வடிவமைப்பும் வியப்பி்ல் வீழ்த்துகின்றன.

‘அலிப்’, ‘லாம்’, ‘மீ்ம்’ போன்ற ஒற்றை எழுத்துகள் திருக்குர்ஆனில் 19 சூராக்களின் ஆரம்பங்களில் இடம்பெற்றுள்ளன. அந்தந்த அத்தியாயங்களில் இந்த ஒற்றை எழுத்துகள் எத்தனை தடவைகள் இடம்பெறுகின்றனவோ அவற்றை 19ஆல் வகுக்க மீதியின்றி வகுபடுகிறது.

‘துன்பம்’ என்பதைக் குறிக்கும் ‘ஷித்தத்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொற்களை 102 இடங்களிலும், ‘பொறுமை’ என்பதைக் குறிக்கும் ‘ஸப்ரு’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொற்களை 102 இடங்களிலும் திருக்குர்ஆன் கையாள்கிறது. சிரமத்தின் அளவு பொறுமையும் இருக்க வேண்டும் என்பதையே இந்த சமநிலை உணர்த்துகிறது.

இதேபோல், ‘ஈமான்’(இறை நம்பிக்கை) என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொற்களை 811 இடங்களிலும், அதற்கு எதிர்ப்பதமான ‘குஃப்ரு’(இறை நிராகரிப்பு) என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொற்களை ‘697’ இடங்களிலும் திருக்குர்ஆன் கையாள்கிறது. இவ்விரண்டையும் கழித்துப்பார்க்க, திருக்குர்ஆனின் அத்தியாயங்களின் எண்ணிக்கையான 114 கிடைக்கிறது.

திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களே உலகில் ஈமான்(இறை நம்பிக்கை) அதிகரித்திட காரணமென்ற கருத்தையும் இது தொனிக்கிறது. இப்படி குர்ஆன் முழுக்க விரிந்து கிடக்கும் கட்டமைப்பு, வாசிப்போரை சிலிர்க்க வைக்கிறது.

அபுதாகீர்