சென்னை முக்கூடல் தமிழ்ச்சங்கத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் கவிஞர்களுக்கு கருமலை கவிக்குயில் விருது

Image



21.04.2025

ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி

அறிஞர் அண்ணா (கலை& அறிவியல்) கல்லூரியில் சென்னை, முக்கூடல் தமிழ்ச் சங்கத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா, பொதுச் செயலாளர், கவிஞர்"சிற்றுளி" அவர்கள் தலைமையில் கவியரங்கத் திருவிழாவாக நடைபெற்றது.

சென்னை ஆர்.முகேஷ் அறக்கட்டளை மற்றும் உளியோசை நல்லிணக்க மேம்பாட்டு மின்னிதழ் ஆகியன இணைந்து நடத்திய இந்த முப்பெரும் விழா நிகழ்வில் கல்லூரியின் முதல்வர், முனைவர் தனபாலன் அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்.

வணிகவியல் பேராசிரியர் ஜெகன் அவர்கள் முன்னிலை உரை வழங்கினார். வந்திருந்த அனைவரையும் தமிழ்த் துறைப் பேராசிரியர் காயத்ரி செல்வக்குமார் தொடக்கத்தில் வரவேற்றார்.

"என்னிலிருந்து தொடங்கட்டும் எதுவும்" என்னும் தலைப்பிலான கவியரங்கம் - மூன்று அமர்வுகளாக அமர்வுத் தலைவர்கள் திருக்கோவிலூர் கலைச்சித்தன், கொழப்பலூர் மஜீத் பாபு மற்றும் புலவர் தங்க விசுவநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நாற்பதிற்கும் மேற்பட்ட கவிஞர்கள் இதில் பங்கேற்றனர்.

முக்கூடல் தமிழ்ச் சங்கத்தின் இதழான "உளியோசை" மின்னிதழில் கதை, கவிதை, கட்டுரை,ஓவியம் போன்ற படைப்புக்களைத் திங்கள் தோறும் தொடர்ந்து வழங்கி வந்து கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள் முப்பத்தைந்திற்கும் மேற்பட்டவர்களுக்கு விழாவில் "வளர் இளம் படைப்பாளர்" விருதுகள் வழங்கப்பட்டன.

கவியரங்கங்கில் கவிதைகளை அரங்கேற்றிய கவிஞர்களுக்கு "கருமலை கவிக்குயில்" விருதுகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் படைப்புகளைச் சிறப்பாக வெளியிட ஊக்குவித்து வரும் அண்ணா கல்லூரிக்கு "ஒளிர்மீன் கலைக்கூட விருது" நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி( மேனாள்) சாகித்திய அகாதமி பொதுக் குழு உறுப்பினர் முனைவர் சுந்தர முருகன் அவர்கள் கவிஞர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். கொங்கணாபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ.மு.ஜெகன்நாதன், சேலம் மாவட்டம் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் பொன். சந்திரன் மற்றும் புதுவை தேசிய விருதாளர் திருமதி. மண்ணாங்கட்டி அம்மாள், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரியா சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் முக்கூடல் தமிழ்ச்சங்கம் சார்பில் அண்ணா கல்லூரி நூலகத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் கவிஞர்களிடம் அன்பளிப்பாகப் பெறப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம் அவை நன்கொடையாக அளிக்கப்பட்டன.

விழாவின் செயல்பாட்டில் வேட்டவலம் தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவையும் தங்களை ஒரு பங்குதாரராக இணைத்துக் கொண்டு விழா சிறப்பாக நடைபெற உதவி செய்தது.

முனைவர் கு. நாகம்மாள், முக்கூடல் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் பூந்தையல் (எ) கற்பகம் ஆகியோர் நிகழ்வுகளைத் தொகுத்தளித்தனர்.

விழா நிறைவில் பேராசிரியர் செல்வக்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.