அமெரிக்காவில் சீறாப்புராணத்தில் ஒளிரும் உவமையும் உண்மையும் இணையவழி நூல் வெளியீட்டு விழா

Image



மிக்சிகன் : யுனைடெட் தமிழ் முஸ்லிம் அசோஷியேசன் ஆஃப் அமெரிக்கா என்ற அமைப்பின் மூலம் உடன்குடி கவின்முகில் மு. முகமது யூசுப் எழுதிய சீறாப்புராணத்தில் ஒளிரும் உவமையும் உண்மையும் என்ற நூலின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு நூல்களும் இணையவழி வெளியீட்டு விழா 08.06.2024 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அமெரிக்க நேரப்படி நடந்தது.

இந்த விழாவுக்கு சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதித் தமிழ் மன்றத்தின் தலைவர் ஜெயஜுலிட் அந்தோணிசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அபுகான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேனாள் உச்சநீதிமன்ற நீதியரசர் எப்.எம். இப்ராஹிம் கலீஃபுல்லாஹ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சீறாப்புராணத்தில் ஒளிரும் உவமையும் உண்மையும் என்ற நூலில் நூலாசிரியர் உடன்குடி கவின்முகில் முகமது யூசுப் சிறப்பான வகையில் ஆய்வை மேற்கொண்டு தமிழுலகத்துக்கு வழங்கியிருப்பதை தனது பாணியில் விவரித்தார்.

மேனாள் சென்னை உயர்நீதிமன்றா நீதியரசர் கே.என். பாஷா, ஊடகவியலாளர் கவிஞர் வீரபாண்டியன், அமெரிக்க மருத்துவர் டாக்டர் ராஷிக், அறிவியல் தமிழ் மன்ற நிர்வாகி கவிஞர் செங்குட்டுவனார் சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் டாக்டர் ஜாஸ்மின், இலக்கிய ஆர்வலர் மற்றும் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். குறிப்பாக சீறாப்புராண தமிழ் கழகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

நூலாசிரியர் கவின்முகில் உடன்குடி மு. முகமது யூசுப் ஏற்புரை நிகழ்த்தினார். அமீரகத்தை தொடர்ந்து அமெரிக்காவில் சீறாப்புராணத்தில் ஒளிரும் உவமையும் உண்மையும் என்ற நூலின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு நூல்களும் இணைய வழியில் வெளியிட சிறப்பான ஏற்பாடுகளை செய்த யுனைடெட் தமிழ் முஸ்லிம் அசோஷியேசன் ஆஃப் அமெரிக்காவின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியை சேர்ந்த டாக்டர் ஹுசைன் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வினை காயத்ரி சிறப்புடன் தொகுத்து வழங்கினார். விழாவில் பேராசிரியர் டாக்டர் மாதவன், கீழக்கரை அபுல் ஹசன், உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்கேற்று சிறப்பித்தனர்.