பாமாலையில் ஒரு பூமாலை' கவியரங்கம் - 78 சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 78 கவிஞர்களின் கவிதை அஞ்சலி!
புதுச்சேரி, ஆகஸ்ட் 15&16, 2024: 78ஆவது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் சென் நெக்சஸ் குழுமம் இணைந்து நடத்திய 'பாமாலையில் ஒரு பூமாலை' கவியரங்கம், உலக சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 15 மாலை 5 மணி முதல் ஆகஸ்ட் 16 அதிகாலை 1 மணி வரை இணையம் வழியாக நடைபெற்ற இந்நிகழ்வில், 78 கவிஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 78 பேரின் தியாகங்களைப் போற்றும் வகையில் கவிதைகளைப் பாடினர்.
முனைவர் இரா. கவிதா செந்தில்நாதன் அவர்களின் துவக்கவுரையுடன் தொடங்கிய நிகழ்வில், திருமதி சுஜாதா வரவேற்புரை வழங்கினார். முனைவர் பஞ்சநதம் தலைமையுரையும், முனைவர் ஆ.முகம்மது முகைதீன் நோக்கவுரையும் வழங்கினர். முனைவர் சத்தியமூர்த்தி மற்றும் உலக சாதனையாளர் செ.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கவிஞர் மஸ்கட் மு. பஷீர் மற்றும் கலைமாமணி திருமதி கலாவிசு சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
உலக சாதனைப் பெண் கலைவாணி, பாமகள் செல்லப்பாண்டி, பாவலர் செந்தாமரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாவலர் பா. கதிரவன், முனைவர் தமிழ்ச்செல்வி, கவிஞர் இதயா, கவிநிலவு தேன்மொழி, மதிக்குறளார் அறிவன் பிணி தீர்ப்பான் மற்றும் கவிக்கடல் ஏகலைவன் ஆகியோர் தலைமையில் ஆறு கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு அமர்விலும் 13 கவிஞர்கள் பங்கேற்று தங்கள் கவிதைப் படைப்புகளை வழங்கினர்.
இக் கவியரங்கம் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தது. 78 கவிஞர்கள் ஒரே நிகழ்வில் ஒன்றிணைந்து, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய கவிதைகளைப் பாடி, இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர். இந்த சாதனையை ஆகஸ்ட் 16 அதிகாலை 12.45 மணிக்கு, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் உலக சாதனையாளர் வெங்கடேசன் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
முனைவர் ஆ. முகம்மது முகைதீன் இச்சாதனையை ஏற்று ஏற்புரை வழங்க, அனைவரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கவிதா செந்தில்நாதன் நன்றியுரை கூற, முனைவர் பிரேமலதா நெறியாள்கையிலும், கவிதாயினி.மோனிஷா ஒருங்கிணைப்பிலும் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இந்தக் கவியரங்கம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் ஒரு சிறந்த அஞ்சலியாக அமைந்ததுடன், தமிழ் கவிதை உலகில் ஒரு புதிய மைல் கல்லாகவும் நிலைத்து நிற்கும்.