துபாயில் பாரத் உத்சவ் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
துபாய் : துபாயில் அமீரக தமிழர்கள் பங்கேற்ற பாரத் உத்சவ் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15,16,17 தேதிகளில் மூன்று நாள் பிரமாண்ட நிகழ்வாக பாரத் உத்சவ் நடைபெற்றது. பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த அமீரக இந்தியர்கள் இணைந்து கொண்டாடிய நிகழ்ச்சி இதுவாகும். ஒவ்வொரு மாநிலத்தவரின் கலை, இலக்கிய, பாரம்பரிய, இசை ஆர்வங்களையும் மற்ற திறமைகளையும் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைத்திருந்தனர் ஏற்பாட்டாளர்கள். ஓவிய கண்காட்சி, இசைவாத்திய முழக்கங்கள், பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்ட புத்தகங்கள், அமீரகத்தின் ஒரே தமிழ் நாளிதழ் தினத்தந்தி என தொடங்கி கிராமிய நடனங்கள், இந்தியதேசியக் கொடி தாங்கிய பாடல் ஆடல் என களை கட்டியது, டிகாம் டிசைன் எனப்படும் நிகழ்ச்சி மேலாளர்கள், இரண்டாவது வருடமாக நடத்திய இந்த விழாவில், திறைமைமிகு தமிழர்கள் பலர் கலந்து கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். முதல் நாள் மதியம் பல குரல் திறனில் முன்னேறி வரும் இளைஞர் அர்விந்த் பாரதி பங்கு கொண்டு மின்சார ரயிலில் பயணம் செய்யும் பல்வேறு நாட்டு அமீரக பயணிகளை போன்று பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். இரண்டாம் நாள் மாலை, மேடை கலந்துரையாடலில் ‘அமீரக-இந்திய இலக்கியத்தின் மதிப்பு’எனும் தலைப்பில், பிற மாநில எழுத்தாளர்களுடன் ரமா மலர் மற்றும் அமீரக கானல் குழும எழுத்தாளர்கள் ஆசிஃப் மீரான் (மலையாள கரையோரம்) மற்றும் சுரேஷ் பாபு(2023 ஸீரோடிகிரி இலக்கிய விருது) பங்கு கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.
அன்று மாலையே, அமீரக தமிழர்கள் எழுதி இயக்கி நடித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது. இதில், ப்ரவீன் ஜாய், அன்பன் கோவிந்தராஜன்( ரஞ்சித்) மற்றும் மணி திலக் இவர்கள் முறையே இயக்கிய மறவாமை, அபூரணமே அழகே, நடுவில் எனும் குறும்படங்கள், அனன்யா மற்றும் ஷ்யாம் மணிகண்டன் இருவரும் இணைந்து இயக்கிய குறும்படங்களின் சிறு தொகுப்பு, அவர்கள் அதற்காக பெற்ற விருதுகளும் திரையிடப்பட்டன. மேலும், ‘இந்திய படங்கள் மற்றும் கலாச்சாரம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் வட இந்தியர்களுடன் இவர்கள் ஐவரும் பங்குகொண்டு, குறும்படங்கள் இயக்கும் அனுபவத்தையும் அமீரக குறும்பட விழாவில் பங்கு கொண்டு வென்ற மகிழ்ச்சியையும் பகிர்ந்தனர். அன்று இரவு, மணி திலக் தன்னிடமுள்ள பல்வேறு விதமான புல்லாங்குழல்களை கொண்டு, தொடர் வாசிப்பில் இனிய காதல் பாடல்களால் வந்தோரை வியப்பில் ஆழ்த்தினார். மூன்றாம் நாள் மதியம் பர்ஹான் நவாஸ் தனது கம்பீரமான மென் குரலில் ஹிந்தி மலையாள பாடல்களை பாடி காண்போர் மனதை கொள்ளை கொண்டார்.
அமீரகத்தின் தமிழ் எழுத்தாளர்களாக தங்களது புத்தகங்களை பார்வையாளர்களுக்காக வைத்திருந்த சசிகுமார்(மெல்ல சிறகசைத்து, எழினி), அபுல் கலாம் ஆசாத்( மின் தூக்கி), மூக்கு கண்ணாடி(திப்பு ரஹிம்) குட்டிகோரா(தெரிசை சிவா) இவர்களுடன் கேலக்சி பதிப்பாளர் குழுமத்தை சார்ந்த ஜசீலா பானு அனைவரும், பிற மாநில கவிஞர்கள் புத்தக ஆசிரியர்களுடன் ‘ அமீரக புத்தக ஆசிரியர்கள் கவிஞர்கள்’ எனும் தலைப்பில் மேடை கலந்துரையாடலில் பங்கு கொண்டு தங்களது எழுத்து அனுபவம், புத்தக வெளியீட்டு தருணங்கள் என பல சுவையான தகவல்களை பகிர்ந்தனர்.
மூன்று நாட்களும் இத்தனை வேறுபட்ட தமிழ் திறனாளர்கள் பங்கு கொண்டு நிகழ்வுக்கு பெருமை சேர்த்தனர் என்றும், அனைவருக்கும் நினைவு சான்றிதழ் வழங்கி மகிழ்ந்தார் ஏற்பாட்டாளர் விகாஸ் பார்கவ் என தகவல் தெரிவித்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரமாமலர்