மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் நடந்த 141 வது தமிழ்க்கூடல் நிகழ்ச்சி
மதுரை : மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், அப்பர் பள்ளியும் இணைந்து நடத்தும் 141ஆவது ‘தமிழ்க்கூடல்; நிகழ்வு 14.11.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வுவளமையர் முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொ) முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள் தலைமை தாங்கினார்.
விளாத்திகுளம் கும்மியாட்டப் பயிற்றுநர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முதுமுனைவர் மு.ஐயப்பன் அவர்களும்; முனைவர் சே.பார்த்தசாரதி அவர்களும் ‘சமகால நிகழ்த்துக் கலைகளில் கிராமியப் பெண்கள் கும்மி - நேரடி அனுபவப் பகிர்வு’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினர்;.
முதுமுனைவர் மு.ஐயப்பன் அவர்;தம் உரையில், “18ஆம் நூற்றாண்டில் நமது நாடு காலனித்துவ ஆட்சியில் சிக்கிக் கொண்டபோது கல்வியறிவு வரவில்லை. அவற்றில் இருந்து மாறத்துவங்கி எழுத்தறிவு பெற ஆரம்பிக்கும்போது மரபுசார்ந்த விசயங்கள் அழியலாயின. கிராமியக் கலைகள் கிராமத்திலேயே செல்வாக்கிழந்த நிலையில நகர்ப்புறத்தை நோக்கிக் கலைஞர்கள் செல்லவேண்டியதாயிற்று. ஏர்க்கலவை, தச்சுப்பட்டறை, கொல்லர் கருவி ஆகிய பல மரபுசார் பணிகளை மறந்துவிட்டோம். பொலிப்பாட்டு, நடவுப்பாட்டு, கட்டுமரம், படகு, ஓடம், உலக்கை, ஏற்றம் இறைத்தல் பாட ஆள் இல்லாமல் போய்விட்டது. நிறையக் கற்றவர்களைவிட வாழ்க்கையைப் படித்தவர்கள்தான் மரபுசார் பண்பாட்டைப் பேணி வருகின்றனர். மரபான கிராமியக் கலைகள், கூத்துகளை இழந்து கொண்டிருக்கிறோம். சமூக மதிப்பைத் தக்கவைக்கும் கிராமக் கலைகள் நிறைய உள்ளன. அந்த வகையில் கும்மி ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. வளையணிந்த கைகளால் பெண்கள் குனிந்தும் நிமிர்ந்தும் ஆடுவது. கைகளால் எழுப்பும் தாளம் இதற்கு அடிப்படையானது. வலது, இடது, முன்புறம், பின்புறம், விசிறிவடிவம், கூட்டல்முறை என 17 அடவுமுறைகள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய முனைவர் சே.பார்த்தசாரதி அவர்தம் உரையில் “பெண்கள் கும்மியாட்டம் என்பது விரல்களைத் தட்டுதல், உள்ளங்கை தட்டுதல், முழங்கை தட்டுதல் எனப் பலவகையாக உள்ளது. 75 வகையான கும்மியாட்டங்கள் நிகழ்த்தியுள்ளேன். கும்மியில் காவடிச்சிந்து பயன்படுத்தியுள்ளேன். சடங்கு சார்ந்து பெயர் சூட்டும்போதும், பூப்பெய்துதல், பந்தக்கால் நடுதல் ஆகியவற்றிலும் கும்மியாட்டம் நடத்தியுள்ளனர். எனது கும்மியாட்டப் பயிற்சிக்காக அண்ணாமலைரெட்டியார் விருது கிடைத்தது. பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கும்மி முதன்மையாக இருந்தது. கும்மியாட்டத்தின் மூலம் உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் கிடைக்கும். வேறு வேறு அடவுகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். கும்மியின் வடிவங்களை மாற்றுவதோடு விவசாயப்பாடல், கயல் பின்னல் கோலாட்டம் ஆகியவற்றையும் நடத்துகிறோம். வடமாநிலங்களில் வண்ண, வண்ண சேலைகளைக் கட்டி ஆடுவர்” என்று குறிப்பிட்டார்.
உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்குத் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், அப்பர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள்; என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.