அல் அய்னில் பாரம்பரிய முறைப்படி நடந்த பொங்கல் திருவிழா

Image



அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையம், அல் அய்ன் தமிழ் குடும்பம் அமைப்புடன் இணைந்து பொங்கல் திருவிழா ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டியது.

அல் அய்ன் நகரில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அல் அய்ன் சமூக மையத்தின் தலைவர் ரசெல் முகம்மது சாலி விழாவுக்கு தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என்றார்.

இந்திய தூதரக அதிகாரி டாக்டர் பாலாஜி ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அல் அய்ன் இந்திய சமூக மையம், அல் அய்ன் தமிழ் குடும்பத்தின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 21 பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து உரி அடித்தல், சிலம்பம், கும்மிப்பாட்டு, மயிலாட்டம், ஒயிலாட்டம், மரக்காலாட்டம், புலியாட்டம் போன்ற தமிழ் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவில் அதீப் குழுமத்தின் தலைவர் டாக்டர் அன்சாரி, அயலக தமிழர் நல வாரிய வளைகுடா உறுப்பினர் எஸ்.எஸ். மீரான், உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் சமூக சேவகர்கள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அமீரகம் முழுவதும் இருந்து தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்திய சமூக மையத்தின் பொதுச் செயலாளர் சந்தோஷ், அல் அய்ன் தமிழ் குடும்பத்தின் பொதுச் செயலாளர் முபாரக் முஸ்தபா, வேல்முருகன், சலீம், ராஜவேல், ஜலீல் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.