சிங்கப்பூரில் மூத்த தமிழறிஞர் கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் நூல்கள் அறிமுக விழா

Image



தலைச்சிறந்த ஆய்வாளரும், மூத்த தமிழறிஞருமான அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் நூல்கள் அறிமுக விழா 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரிலுள்ள மஸ்ஜித் சுல்தான் பல்நோக்கு மண்டபத்தில் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மௌலானா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பொறியாளர் வா.ச நிஜாமுதீன், புதுவை மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் அ.ஷேக் அலாவுதீன், காயல்பட்டினம் நலச்சங்கம் முன்னாள் தலைவர் வாவு ஷாஹுல் ஹமீத் ஷாஜஹான், இந்திய முஸ்லிம் சமூக வழிகாட்டுக் குழுத் தலைவர் முஹம்மது கௌஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் அ.முஹம்மது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Image


ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளைத் தலைவர், முனைவர் மு.அ. காதர், மூத்த ஊடகவியலாளர் முஹம்மது அலி, சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான ஷாநவாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வின் முத்தாய்ப்பாக ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மௌலானா, சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் அ.முஹம்மது இர்ஷாத் ஆகியோர் இணைந்து ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் எழுதிய நாயகர் பன்னிரு பாடல், ஈழவள நாட்டிற் பயிர்பெருக்க வாரீர், குறிஞ்சிச் சுவை, பாலைவனம், சிறார் பாடல்கள், பாத்திமா நாயகியார் மாலை, அப்பாஸியாக்கள், உமர் ரலி புராணம், அற்புத அகில நாதர், குத்புகள் திலகம் யாஸின் ரலி வரலாறு, மஹானந்தலங்கார மாலை உள்ளிட்ட 11 நூல்களை அறிமுகப்படுத்தினர்.

நூலாசிரியர் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் எழுதிய “ஈழவள நாட்டிற் பயிர்பெருக்க வாரீர்” எனும் நூல் 1967ஆம் ஆண்டு “இலங்கை சாகித்திய மண்டல விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நூல்கள் குறித்த ஆய்வுரையை கவிமாலை காப்பாளர் புதுமைத்தேனீ மா. அன்பழகன், ஜாமியா சிங்கப்பூர் அற நிறுவன சமய நல்லிணக்கப் பணி மூத்த இயக்குநர் முனைவர் எச். முஹம்மது சலீம் ஆகியோர் வழங்கினர்.

சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு சமூக நல சேவையாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை அப்துல் சுபஹான் வழிநடத்தினார்.