சிங்கார சென்னை

Imageபெயருக்கு ஏற்ற மாதிரி தான் எங்கள் ஊர் இருந்தது. அப்போது தீபெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் நெறுக்கி வீடுகள் கிடையாது. அபார்ட்மன்ட் கல்ச்சர் அறவே கிடையாது. நாங்கள் வசிக்கும் இடத்தில் ஒவ்வோரு வீட்டை சுற்றியும் இடைவெளி தாராளமாக இருக்கும். அதில் ஒவ்வொரு வீட்டிலும் அழகிய தோட்டம் அவரவர் ரசனைக்கு ஏற்றவாரு அமைந்திருக்கும். மாமரம், தென்னை வாழை, நெள்ளிக்காய், கொய்யா, வேப்ப மரங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும். வெற்றிலை, பாகற்காய் கொடிகள், மிளகாய், சுண்டக்காய் செடிகள், செழிப்பாய் வளர்ந்திருக்கும். வீட்டின் முன்புறம் செவ்வரளி, செம்பருத்தி, சூர்யகாந்தி, நித்யமல்லி, பவழ மல்லி, ரோஜா பூக்கள் கண்களுக்கு விருந்தாய் இருக்கும். துளசி மாடம் ஒரு தனி அழகு. தினமும் பசுவின் பால் கிடைக்கும்.

ஒவ்வொரு வீட்டிலும் ஜன்னல்கள் குறைவில்லாமல் காணப்படும். வெளிச்சத்திற்கும் காற்றுக்கும் குறைவே கிடையாது. ஏசி என்றால் என்னவென்றே தெரியாது. வீட்டின் பின்புறம் கிணறு இருக்கும். அதில் எப்போதும் குறையாமல் தண்ணீர் உண்டு. வீட்டின் முன்பு காலி நிலபரப்புகள் இருந்தன. பள்ளி எப்போது முடியும் என்று காத்திருந்து அதில் ஓடி ஆடி விளையாடிய காலமது.

வீடு வெவ்வேறாக இருந்தாலும் ஒரே குடும்பம் போல் அக்கம்பக்கதினர் பழகுவார்கள். எங்களுக்கு வலப்புறம் ஒரு வீடு. இடையில் மதில் சுவர் கிடையாது. இடபுறம் ஒரு வீடு. தினமும் சமைத்த உணவுகளை பரிமாறி கொள்வோம். "ஆனந்தி...மாமி வடை மாவு போட்டுறுக்கேன் சாயங்காலம் சாப்பிட வா" என்று முன்பே குரல் கொடுத்து விடுவார் வலபுறம் இருக்கும் மாமி. இடபுறம் வீட்டு மைதிலி அக்கா மீன் வறுவல், பால் கொழுகட்டை என்று எது செய்தாலும் கொண்டு வந்து வடுவார். காலிங் பேல் அடிக்க தேவை இருக்க வில்லை. நாங்கள் வசித்த தெருவில் கொஞ்சம் தள்ளி ஒரு தெலுங்கு குடும்பம். கொஞ்சம் பெரிய குடும்பம். அவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் மட்டும் மூன்று பேர். அனைவரும் என்னை விட மூத்தவர்கள். சனி ஞயாயிறு என்றால் அவர்கள் வீடு தான் எங்களுக்கு விளையாட்டு களம். அக்கம் பக்கம் உள்ள பிள்ளைகள் அனைவரும் சேர்ந்தால் குறைந்த்து இருபது பேர் இருப்போம். கண்ணாமூச்சி, பல்லாங்குழி, டிரேட், தாயம், கருங்கல் விளையாட்டு, ஓடி பிடித்தல், ஆடல், பாடல், ஏன் நாடகங்கள் கூட நிகழ்த்துவோம். அரை ஆண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்போம். கொண்டாட்டம் இரட்டிப்பாகும். எல்லா குடும்ப நபர்களும் ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்களாக இருப்பார்கள்.

"பெண் குழந்தைகளை விளையாட அனுப்பி விட்டு கவலை பட்டு கொண்ட்டிருந்த்தில்லை. அவர்கள் பத்திரமாக இருந்தார்கள்".

"அங்கே இங்கே இளவட்டங்கள் இடையே சின்ன காதல் இருந்தது காமம் இல்லை".

புது வருடம், பொங்கல், தீபாவளி, கார்திகை, நவராத்ரி எல்லாம் ஒற்றுமையாக சிறப்பாக கொண்டாடுவோம். நித்தமும் தீபாவளி தான் எங்களுக்கு. மார்கழி மாதம் சுவர்க்க பூமியாக இருக்கும். வீதி மழுவதும் விடிய விடிய போட்டி போட்டு கொண்டு வண்ண கோலங்கல் போடுவோம். இளங்காலை ஜில்லென்ற தென்றல் காற்று, பனிமூட்டம் எங்கும், மிதமான குளிர். அற்புதமான உணர்வு. அன்பு, பாசம், அரவணைப்பு, சூழ் உலகமது.

என் தந்தை இறந்த போது அந்த துயரம் தங்கள் வீட்டிலேயயே நிகழ்ந்த்து போல் ஒவ்வொருவரும் கொடுத்த அரவணைப்பு மறக்க முடியாதது.

திருமணம் முடிந்த கையோடு துபாய் சென்று விட்டேன். பன்னிரண்டு வருடங்கள் துபாய் வாழ்கை. மீண்டும் சென்னைக்கு குடி புகுந்தேன். கார்ப்பரேட் கல்ச்சர் சென்னையை மொத்தமாக விழுங்கியிருந்த்து! நான் வசித்து வந்த இடத்தில் 80% வீடுகள் அபார்ட்மென்ட் டாக மாறியிருந்தது! பழைய ஆட்கள் வெகு சிலரே இருந்தனர். சென்னை பரபரப்பான ஊர் தான், ஆனால் இப்படி மூச்சு முட்டும் அளவிற்கு போக்குவரத்து நெரிசலும், புழுதி மிகுந்த காற்றும் முக்கியமான இடங்களில் மட்டுமல்லாது, மக்கள் வசிக்கும் இடத்திலும் மாறியிருந்த்து வேதனை. பணம் வேண்டுமே...நானும் ஒரு கார்பரேட் கம்பனியில் தான் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு விஷயம் கவனித்தேன். அங்கு வேலை பார்த்த பாதி பேருக்கு மேல் சென்னை அல்லாது பிற மாநிலம் அல்லது பிற ஊர்களில் இருந்து வேலை பார்க்க வந்தவர்களாவர். ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட கார்பரேட் கம்பெனிகள். வந்தாரை வாழ வைத்திருக்கிறது சென்னை. ஆனால் இங்கு வாழ்வதை கடுமை ஆக்கி விட்டது.

கடைசி சொட்டு தண்ணீர் வரை போர் பம்புகள் உறிஞ்சுகின்றன. கிணறுகளால் பயனில்லை. அக்கம் பக்கத்தில் யார் வசிக்கிறார்கள் தெரியவில்லை. வீட்டில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் அன்யோன்யமாக பழகுவது குறைந்து விட்டது.

முறையே பருவ மழை பொழிவதில்லை. கேன் தண்ணீருக்கும் மினரல் வாட்டருக்கும் அடிமையாய் வாழ்கிறோம். தூய காற்று இல்லை. ஏசி இல்லாமல் ஜீவிக்க முடியவில்லை. Packet பால் தான் தினமும். ஆனால் மாடுகள் மேய்வதை பார்த்ததில்லை!

நான் அலுவலகம் விட்டு வீடு திரும்பியவுடன் குறைந்தது அரை மணி நேரம் என் குழந்தை என் அருகில் வர மாட்டாள். மீறினால் எரிந்து விழுவேன். வேலை சோர்வு, போக்குவரத்து நெரிசல் எல்லாம் சேர்ந்த எரிச்சல் அடங்க சற்று நேரமாகும். என் குழந்தை எப்பொழுதும் தனிமையில். Mobile, Laptop இதை தவிர வேறு எதுவும் அவள் உலகில் இல்லை. உலகமே மொபைல் போன் க்குள் என்றாகி விட்டது.

பழைய சென்னை தொலைந்து விட்டது. திரும்ப கிடைக்காது.

ஒரு வேண்டுகோள்... இதெல்லாம் ஒரு ஊரா என்று நிந்திக்காதீர்கள்.

மனது வலிக்கின்றது.....

Anandhi Muthukumaran