சுயமரியாதை

Image"டின்னர் எடுத்து வைக்கட்டுமா?" என்றாள் அனிதா.

"அதெல்லாம் இருக்கட்டும். உன் கிட்ட பேசனும்" என்று டிவியை ஆப் செய்து விட்டு எழுந்தான் சரத்.

அனிதா தயங்கியபடி நின்றாள்.

"இங்க பாரு அனிதா...எனக்கு என் கேரியர் தான் முக்கியம். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. ஆஸ்த்ரேலியா போக எனக்கு உடனே ஆறு லட்சம் பணம் வேனும். உங்கப்பா கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணு" என்றான்.

அனிதா திடுக்கிட்டு பார்த்தாள். சொல்லி வைத்தது போல் அவள் மாமனாரும் மாமியாரும் அவர்கள் ரூமிலிருந்து வெளியே வந்தனர். அவளை ஒரு வித பயம் சூழ்ந்தது. இன்றைக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று புரிந்து விட்டது. வெகு நாட்களாக புகைந்து கொண்டிருந்தது, கொழுந்து விட்டு எரியப்போகிறது என்று மனம் பதைபதைத்தது.

"என்ன சொல்றீங்க சரத்? ஆறு லட்சமா?? கல்யாண கடனே அங்கங்க பாக்கி இருக்கு. அதுக்குள்ள இவ்ளோ பணத்துக்கு அப்பா எங்க போவார்? வாட் ஹாப்பண்ட் டு யு...? உங்க அம்மா அப்பா பேச்சை கேட்டு ஏன் இப்படி நடந்துக்கறீங்க? என்று அவள் சொல்லி முடிப்பதற்க்குள் அவளை பளாரென்று கன்னத்தில் அறைந்தான். உதட்டோரம் நெருப்பு போல் எரிந்தது. தன் நடுங்கும் விரலால் அந்த இடத்தை மெதுவாகத் தொட்டாள். எரிச்சலோடு சேர்ந்து இன்னும் வலித்தது. கண்கள் கலங்கியது. வலியும் அவமானமும் ஒன்றாக சேர்ந்து நெஞ்சே வெடித்து விடும் போல் தோன்றியது.

"Don't dare to speak about my parents...அவங்க சொன்னதுல என்ன தப்பிருக்கு? நான் தான் முட்டாள்தனமா அவசரப் பட்டுட்டேன்." என்றான் சரத் ஆத்திரமாக.

இது தான் சந்தர்ப்பம் என்று சரத் அம்மா ஆரம்பித்தாள்.

"பார்த்தியா சரத்து...நீ இருக்கும் போதே எப்படி வாயடறா பாரு? சம்பாதிக்கிறோம்னு திமிரு" என்று அவன் கோபத்தை மேலும் ஏற்றினாள்.

"அன்னைக்கே சொன்னேன் சேகர் மகளை கட்டி வைக்கலாம்னு...என் பேச்சை எங்க கேட்டீங்க? பொள்ளாச்சியில இடம், சென்னைல இரண்டு கிரவுண்டு வீடு, சூப்பர் மார்கெட் எல்லாம் நம்ம பய பேருல வந்துருக்கும். இவள் தான் அழகா இருக்கான்னு ஒன்னும் இல்லாதவள கட்டிகிட்டான்" என்று மேலும் சரத்தை உசுப்பி விட்டார் மாமனார்.

சரத் கல்லைப் போல் நின்று கொண்டிருத்தான். அவன் முகம் முழுவதும் கோபமும் குரோதமும் பரவியிருந்தது.

திடீரென்று இரக்கமில்லா மிருக கூட்டத்தின் மத்தியில் இரையாக மாட்டிக் கொண்டவள் போல் உணர்ந்தாள் அனிதா. சரத்தை அச்சதோடு நோக்கினாள். வேதனையுடன் அவன் முன் நின்றாள்.

"ஹவ் குட் யு ஹிட் மி சரத்" என்று குரல் தழுதழுக்க கேட்டாள்.

"இங்க பாரு. உன் எமோஷனல் டிராமால்லாம் பார்க்க நான் ரெடியா இல்ல. ஒரு வாரத்துல பணம் வந்தாகனும்" என்றான் இரக்கமே இல்லாமல்.

அனிதாவிற்கு அவள் அப்பா சேதுவின் முகம் கண் முன் வந்து போனது. பாவம் அவர், அவருடைய வாழ்நாளின் மொத்த சேமிப்பையும் அனிதாவிற்காக தியாகம் செய்து விட்டார். இனி கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை. மிச்சமிருப்பது சொந்த வீடு மட்டும் தான்.

"எனக்கிருக்கிறது நீ மட்டும்தான்மா, நீ நல்லபடியா கல்யாணம் ஆகி செட்டில் ஆகுறது விட அப்பாக்கு வேற என்ன வேனும்" என்பார்.

அனிதா ஐடி கம்பெனியில் வேலை செய்து ஈட்டிய சேமிப்பு மொத்தமும் இந்த திருமணத்திற்காக செலவழித்தாகி விட்டது. இன்னும் வேண்டும் என்கிறார்களே? இதற்கு முடிவே இல்லையா?? அவள் மனம் அழுதது.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது.

"உங்க மகள் எங்களுக்கும் மகள் தான். நீங்க எதைப்பத்தியும் கவலைப் படாதீங்க" என்றாள் சரத்தின் அம்மா. அனிதாவின் அப்பாவிற்கு திருப்தியாக இருந்தது. தைரியமாக இந்த வரனை ஒத்துக்கொண்டார்.

ஆனால் மாப்பிள்ளை அழைப்பின் போதுதான் சரத் வீட்டாரின் சாயம் வெளுக்க துவங்கியிருந்தது.

"சம்மந்தி..."...."சரத்துக்கு அடிஷனலா ரூபி மோதிரம் கேட்டோமே? மாப்பிள்ளை அழைப்புல இதெல்லாம் போட்டாதான சிறப்பாருக்கும். இன்னும் நீங்க கொடுக்கலையே?" என்று சிடு சிடுத்தார் சரத்தின் அப்பா.

"கோச்சிக்காதீங்க சம்மந்தி. ஆர்டர் கொடுத்தாச்சு. ரெண்டு நாள்ல வந்துரும்" என்றார் சேது.

"என்ன பேசுறீங்க நீங்க?? அது வராம மாப்பிள்ளை அழைப்பெல்லாம் கஷ்டம், பார்த்து செய்ங்க" என்று போனை படக்கென்று வைத்துவிட்டார்.

சேதுவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. முதல் முறையாக ஒரு புள்ளியாக கவலை ஆரம்பித்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு நடக்க வேண்டியதைப் பார்த்தார். மாப்பிள்ளை அழைப்போடு எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்த சேதுவிற்கு தொடர்ச்சியாக சரத் வீட்டாரிடமிருந்து... அது வேண்டும்...இது வேண்டும் என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது. பெரும் போராட்டத்துடன் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

திருமணத்திற்கான விடுமுறை முடிந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள் அனிதா. அவள் நண்பர்கள் கேலியுடனும் ஆரவாரத்துடனும் அவளை வரவேற்றனர்.

"There you are...welcome back Anitha" என்று உற்சாகபடுத்திவிட்டு நகர்ந்தார் Boss.

"Hi mam welcome...நீங்க வரலைனா நான் உங்க வீட்டுக்கு வந்திருப்பேன். So hectic you know" என்றான் கேசவ். அனிதாவின் team member. அவளிடம் அதிகம் திட்டு வாங்குபவன் அவன் தான். அலட்டிக் கொள்ளாமல் வேலை பார்ப்பான். . அனால் சொன்ன நேரத்தில் முடித்து விடுவான். Meeting உள்ள போது கடைசி நிமிடம் தான் வருவான். Dress code follow செய்ய மாட்டான். எதற்க்கும் பதற்றப்பட மாட்டான். எப்போதும் ஜாலி மூடில் இருப்பான். அவன் வந்தாலே அந்த இடம் கலகலப்பாகிவிடும். அதனால் அவனை அனைவருக்கும் பிடிக்கும்.

"Yes Kesav...let's start with priorities" என்று புன்னகைத்தாள்.

"Thanks to all" என்று மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு வேலையைத் துவக்கினாள்.

அனிதா படிப்பிலும் சரி, பார்க்கும் வேலையிலும் சரி, அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவள்.

அலுவலகம் விட்டு வீடு திரும்பும் அனிதாவை அவள் மாமியார் ஜாடையாக மட்டம் தட்டுவது வழக்கமாக இருந்தது.

"உங்கம்மா கொடுத்த பாத்திரமெல்லாம் ஒன்னும் கனமாவே இல்லையே?"

"கட்டில் ஒரிஜினல் தேக்கு மாதிரியே தெரியல. உங்கப்பா எங்கயோ சீப்பா கிடைக்குதுன்னு வாங்கிட்டார் போல"

"என் அக்கா மகளுக்கு சீர்வரிசையா கார் கொடுத்தாங்க. நீங்க தான் இப்படி பைக்கோட நிறுத்திட்டீங்க" என்று அடிக்கடுக்காக ஓயாமல் இளப்பமாக பேசுவாள்.

எல்லாவற்றிற்கும் "அப்படீங்களா அத்தை" என்று இரண்டே வார்த்தையில் பதில் கூறி நாட்களை நகர்த்தி வந்தாள். இது பற்றி சரத்திடம் கூறினாலும் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் சரத்தே இப்படி மாறிப்போவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. அப்போது தான் திருமணம் என்ற பெயரில் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டோமோ என்று இடிந்து போனாள் கை நீட்டும் அளவிற்கு வந்து விட்டானே. என்று நொந்து போனாள்.

அன்று இரவு முழுவதும் ஹால் சோபாவிலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். விடியற் காலையில் உறங்கி போனாள். அடித்து பிடித்து ஆபீஸ் சென்றடைந்தாள்.

மதியம் ஆபீஸ் canteen னில் order செய்த சாப்பாட்டின் முன் ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

"Hi mam" என்று அவள் முன் ஜூஸ் டம்ளருடன் அமர்ந்தான் கேசவ்.

"Hi" என்று மெலிதாக புன்னகைத்தாள். ஆனால் அதில் ஜீவன் இல்லை.

ஜூஸை ரசித்து உறிஞ்சிக் கொண்டிருந்தான்.

"என்னாச்சு மேம் உங்களுக்கு? You are not alright...எப்பவும் ஏதோ யோசனையிலேயே இருக்கீங்க?? சட்டென்று சிறிய ஆச்சர்யத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இந்த கேள்வியை அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

"Nothing கேசவ்...I'm...I'm alright" என்று சிறு தடுமாற்றத்துடன் பதிலலித்தாள்.

அவன் ஜூஸ் டம்ளர் காலியாகியது.

இப்போது அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தான்.

"முகத்துல என்ன காயம்?" கீழே விழுந்ததுட்டேன்னு செல்லாதீங்க. அப்படி சொன்னீங்கன்னா அது பொய்..." என்று நிறுத்தினான்.

அனிதா எப்படி ரியாக்ட் செய்வது என்று பிடிபடாமல் தவித்தாள்.

Kesav பெருமூச்சு விட்டு தொடர்ந்தான்..."you know..domestic violence is punishable " என்றான்.

இவ்வளவு துல்லியமாக தனக்கு நடந்ததை கண்டுபிடுத்து விட்டானே!!!இப்போது அவள் கண்கள் நிரம்பியது. மிகவும் சிரமப்பட்டு அழுகையைக் கட்டுப்படுத்தினாள். துக்கம் தொண்டையை அடைத்து.

சட்டென்று தண்ணீர் பாட்டிலை திறந்து அவள் முன் நீட்டினான். உடனே வாங்கி குடித்தாள். சில நொடிகள் அங்கே அமைதி நிலவியது.

அனிதாவின் மொபைல் ஒலித்தது. சரத் தான் பேசினான்

"உங்கப்பாகிட்ட சொல்லிட்டியா?"

அவள் பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தான். "நேர்ல போய் சொல்லு. அப்ப தான் அவர் பணம் ரெடி பண்ணுவார்" என்று அதிகார தோரணையில் உரக்கப் பேசிவிட்டு போனை கட் செய்தான்.

அவன் பேசிய ஒவ்வோரு வார்த்தையும் துல்லியமாக கேசவ் காதிலும் விழுந்தது.

அனிதா அவமானத்தால் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

"மேம்" என்று அவள் மௌளனத்தை கலைத்தான் கேசவ்.

"பணம் கொடுக்க முடியாதுனு சொல்லுங்க."

அவனை வேதனையுடன் பார்த்தாள்.

"தைரியமா சொல்லுங்க மேம். இந்த மாதிரி ஆளுங்கல்ள்லாம் கேட்டுக்கிட்டே இருப்பாங்க... ஓய மாட்டாங்க". என்றான்.

"கூகுள்ல ..."dowry deaths" னு தேடிப் பாருங்க. ஓவ்வொரு ஸ்டேட்லயும்... நாளுக்கு நாள் லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது. பாம்ப கடிக்க வெச்சு கொல்றானுங்க...எரிச்சு கொல்றாங்க...அடிச்சே கொல்றாங்க.

You want to be one of the victim? நீங்களும் இந்த மாதிரி பண வெறியன்களோட பேராசைக்கு பலியாகனும்னு ஆசையா?? One more thing...நான் தெரியாமத்தான் கேட்குறேன், பொன்னுங்களாம் ஏன் இப்படி இருக்கீங்க? கல்யாணம் பண்ணிக்கிட்டு போகும் போதே கார் இருக்கனும்...ரெண்டு மாடி வீடு இருக்கனும்...சொத்து இருக்கனும்...அப்ப தான் சந்தோஷமா இருக்க முடியும்னு ஏன் நினைக்குறீங்க?? .

நல்லா படிச்சு சொந்த உழைப்புல வாழனும்னு ஆசைபடுற எந்த ஆம்பிளையும் டௌரி கேட்க மாட்டான். அந்த மாதிரி தன்மானம் உள்ள ஆம்பிளை தான் பொண்டாட்டிய நல்லா வெச்சி காப்பாத்துவான். இது உங்கள பெத்தவங்களுக்கும் புரியறதில்ல. பணம் செலவு பண்ணி பாழும் குழியில தள்ளுராங்க. Dowry வாங்குறது தப்புன்னா...அதை கொடுக்குறது தான் அதை விட பெரிய தப்பு. தப்பு பண்றது உங்க husband டும் அவங்க வீட்டாளுங்களும் தான். நீங்க ஏன் கூனி குறுகி உட்கார்ந்துருக்கீங்க? எதற்காகவும் யாருக்காகவும் சுயமரியாதையை விட்டு கொடுக்காதீங்க. அது உங்க புருஷனா இருந்தாலும் சரி. அப்படி விட்டு கொடுக்க ஆரம்பிச்சீங்கன்னா ஒரு நாள் காணாம போய்டுவீங்க... " என்று எழுந்தான். "நான் வரேன் மேம் என்று சென்றுவிட்டான்.

அனிதா அதே இடத்தில் ஆணி அடித்தது போல் அமர்ந்திருந்தாள். கேசவ் பேசிய ஒவ்வொரு வார்தைகளும் சவுக்கடிகளாக அவளை காயப்படுத்தினாலும் அதில் உண்மை இருந்தது.

கடந்த நான்கு மாதங்களாகத் தன் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த மன போராட்டத்திற்கு முற்று புள்ளி வந்தது. கேசவ்வின் பேச்சால் மனம் தெளிவடைந்தது.

மாலை வீட்டிற்கு கிளம்பும் போது மறுபடியும் சரத்திடமிருந்து கால். "Hello உங்கப்பாவ பார்க்க கெளம்பிட்டியா?

"கிளம்பிக்கிட்டே இருக்கேன்...dowry prohibition act பத்தியும்...latest amendment sec 6 பத்தியும் விசாரிக்கனும். அதோட domestic violence act பற்றியும் discuss பண்ண வேண்டியிருக்கு"

"What?? என்னடி சொல்ற?

"ஏன்? சொன்னது காதுல விழல??"

"ஏய் என் டாடி பத்தி தெரியும்ல?"

"எனக்கு உன் டாடி பத்தி நல்லாவே தெரியும். ஆனா, நான் சொன்ன act and sections லாம் என்னனு படிச்சு தெரிஞ்சுக்க சொல்லு". என்று அழைப்பை துண்டித்தாள்.

மனம் முழுக்க தன்னம்பிக்கை பூ பூத்தது....இழந்த சுயமரியாதையை திரும்ப பெற்றது போல் ஒரு பேரானந்தம்.

புன்னகையுடன் பழைய கம்பீரத்துடன் நடந்தாள்.

Anandhi Muthukumaran