தங்கம்மாள்
நம் வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை பல வருடங்கள் தொடர்ந்து வரும். நம்மை பெற்றவர்கள் மட்டுமல்லாது, அவர்களை பெற்றவர்களான.. நம் தாத்தா பாட்டியும் நம்முடன் நிறைய காலம் வாழ்வது என்பது வரமே!
என் பாட்டியின் பெயர் தங்கம்மாள். அப்பாவுடைய அம்மா. அவரை "ஐயம்மா" என்று தான் அழைப்போம். கிராம்புறங்களில் அப்பாவை "ஐய்யா" என்று தான் அழைப்பார்கள். அதனால் தான்...ஐய்யாவின் அம்மாவான என் பாட்டியை..."ஐயம்மா" என்று அழைக்க கற்று கொடுத்தார்கள் போலும். கிராம வாசியான என் ஐயமாவை சென்னையில் உள்ள எங்கள் வீட்டிற்கு அடிக்கடி அழைத்து வந்து விடுவார் அப்பா.
விவரம் தெரிந்து நான் முதன் முதலில் ஐயமாவை பார்த்த பொழுது என் கண்களுக்கு மிகவும் வினோதமாக தெரிந்தார். அவர் சேலை உடுத்தி இருக்கும் விதம் கிராமத்தில் மட்டுமே பார்க்க முடியும். காதுகளில் பம்படம் அணிந்திருப்பார். அது மிகவும் பாரமாக... காது எப்போது அறுந்து விழும் என்பது போல் இருக்கும். Hair Style vera level. தலையை என்ன செய்து வைத்திருக்கின்றார் என்றே புரியாது. மெலிந்த உடல்...உடல் முழுவதும் சுறுக்கம். ஒரு பல் கூட கிடையாது. ஆனால் வெற்றிலை பாக்கு போடாமல் இருக்க மாட்டார். வெற்றிலை இடிப்பதற்கென்று பிரத்யேகமாக இரும்பாலான குப்பி வைத்திருப்பார். பல சமயங்களில் நான் தான் இடித்து தர வேண்டியிருக்கும். "நல்லா மைய்யா இடி" என்று அதட்டி கொண்டே இருப்பார். ஒரே இடத்தில் ஆயாசமாக கால்களை நன்கு நீட்டி தான் அமர்வார். குறுக்கும் நெடுக்குமாக ஓடி ஆடி விளையாட முடியாது. "அந்த காத்தாடிய போடு" என்பார். Fan ஐ தான் அப்படி கூறுவார். "அந்த பொட்டிய போடு" என்பார். வேறென்ன "TV" தான். கண்ணாடி போட்டும் பார்வை சற்று மங்கலாக தான் தெரியும். "பொட்டிகுள்ள தெரியுரது யாரு? செவிலி கனேசனா"? என்பார். அவர் சிவாஜி கணேசனை தான் அப்படி கூறுவார்.
நான் விளையாட வீதியில் இறங்கினாலே அவருக்கு பிடிக்காது.
"இவ என்ன என்னேரமும் விளக்கு வெச்சு தெருவுல ஆடுரவ? விளக்கு வெச்ச பொரவு பொம்பல புள்ள தெருவுல ஆடகூடாது ஆத்தா" என்று புலம்புவார். ஆனால் தடுத்ததில்லை. நான் விட்டிற்குள் நுழையும் வரை வசவுகள் தொடரும் என் அம்மாவிடம்.
"அப்பா...பா...ஐயமா எப்போ ஊருக்கு போவாங்க?" என்று அப்பாவை நச்சரிப்பதுன்டு். அவரிடமிருந்து புண்ணகை மட்டுமே பதிலாக வரும். அப்பா office முடிந்து வந்தால் போதும், ஒரு நூறு முறையாவது "இராமசந்திரா" என்று அழைத்து ஏதேனும் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பார். நிறைய நாட்கள் கவனித்திருக்கிறேன்...என் அம்மாவிடம் எதாவது வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார் கோபமாக. எனக்கு கடுப்பாக இருக்கும்.
ஐயம்மா அடிக்கடி கை கூப்பி எதாவது பிராத்தனை செய்வார். பகலில் தோட்டத்தை சுற்றிச்சுற்றி வருவார். மண்ணை குச்சியால் நோண்டி கொண்டிருப்பார். புற்களை பிடுங்கி எறிவார். பகலில் வெளியில் உள்ள திண்ணையில் தான் உறங்குவார். ஓரெ இடத்தில்இருக்க மாட்டார்.
ஒரு நாள் ஐயமாவிற்கும் என் அம்மாவிற்கும் ஏதோ சண்டை. வம்படியாக ஐயமா என் சித்தப்பா வீட்டிற்கு (அப்பாவின் தம்பி) கிளம்பி விட்டார். என் அம்மாவிடம் லேசான விசும்பல். என் கோபம் அமிகமானது. என் கன்னத்தை தடவி கொடுத்தார். நான் ஒன்றும் பேசவில்லை. "நான் போறேன் ஆத்தா" என்று கிளம்பி விட்டார் ஓரிரு மாதம் கடந்திருக்கும். என் சித்தப்பா வீட்டிற்கு சென்றேன். "சித்தி என்று அழைத்து கொண்டே நுழை வாயிலை நெருங்கிருப்பேன்...ஐயம்மா வெளியே வந்தார். என்னை பார்த்ததும் சந்தோஷம் அவருக்கு. நான் அவரை தவிர்த்து மீண்டும் " சித்தி" என்று உரக்க அழைத்தேன். ஐயம்மா என்னை தீர்கமாக பார்த்தார். என்னை தாண்டி நடந்தவர்...மீண்டும் என் முன்னால் நின்றார். "இந்த கெழவி கிட்ட பேச மாட்டியா? உங்ஙம்மா பேச வேனாம்னு சொன்னாளா? ஆத்தா...நீ என் சாமி ஆத்தா" என்றார். அவர் கண் கலங்கியது. திகைத்து போனேன். அதற்குள் சித்தி வந்தார். உள்ளே அழைத்து சென்றார். அவருடன் பேசி விட்டு சீக்கிரமே கிளம்பி விட்டேன். ஐயமா முறத்தில் பூண்டை கொட்டி வைத்துக் கொண்டு தோலை நீக்கி கொண்டிருந்தார். நான் கிளம்பியது அவருக்கு தெரியாது. ஆனால் என் மனம் பாரமாக இருந்த்து. சில மாதங்களில் ஐயம்மா ஊருக்கே போய்விட்டார். வருடங்களும் ஓடின.
ஒரு நாள் அப்பா ஊருக்கு அவசரமாக கிளம்பினார்.
"அப்பா எங்கம்மா போராங்க"?...
" ஊருக்கு"...
"எதுக்கு"?
"ஐயமாக்கு உடம்பு சரி இல்லை பார்க்க போறாங்க"...
மறு நாள் விட்டியற்காலை ஒரு ஐந்து மணி இருக்கும். வீட்டின் பின் புற தோட்டத்தில் நான். என் கண் முன் ஐயம்மா. வெள்ளை சேலை உடுத்தி இருந்தார். என்னன வாரி அணைத்து கொண்டார். "உனக்கு ஐயமாவ பிடிக்கும்ல" என்று கேட்டார். ஓரே நொடி தான். மறைந்து விட்டார். வாரி சுருட்டிக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். கை கால் எல்லாம் ஜில்லென்றாகியிருந்த்து.
நான் பார்த்தது...உணர்ந்து...கனவா? நிஜமா? கனவு தான் என்று புரிய ரொம்ப நேரம் ஆகியது. அன்று இரவு அப்பா ஊர் திரும்பினார். மொட்டை அடித்திருந்தார். என் அம்மா பெரும் குரலெடுத்து அழத்துவங்கினார். "ஐயம்மா நம்மல விட்டுட்டு சாமிகிட்ட போய்ட்டாங்க" என்று அழுதார்.
அதிர்ச்சியில் உறைந்து போனேன். "இல்லமா...அவங்க என்ன கட்டி பிடிச்சாங்களே...இங்க தான்..காலைல"...அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.
அந்த கனம்.."theories about dream...facts of subconscious mind"...."logical reasoning" இவை எல்லாமே பொய்யாக தோன்றியது எனக்கு. ஐயமா இந்த உலகை விட்டு பிரிந்தும்...என்னை பார்க்க வந்த்து உண்மை. அது கனவு இல்லை...I felt her hug...
ஐயம்மா மிகவும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவராம். தாத்தாவோடு சிறிது காலம் Burma வில் இருந்தவராம். ஆனால் வாழ்க்கை பயணம் அவரை ஒரே ஆளாக குடும்ப சுமையை சுமக்க வைத்து. செல்வம் இழந்து பொலிவிழந்து என் தந்தையையும் அவருடன் பிறந்தோரைம் ஆளக்கியிருக்கிறார்...அந்த ஜீவன் இல்லை என்றால்...எங்களுக்கு இன்று இந்த வாழ்க்கை இல்லை.
மறுபடியும் அந்த வெற்றிலை இடிபடும் சத்தத்தை கேட்கவே முடியவில்லை. என் அப்பாவை... முழு பெயர் சொல்லி உரிமையாக அழைக்க ஆள் இல்லை....எப்போதும் ஐயம்மா எப்ப கிளம்புவாங்க என்று கேட்க்கும் நான்..."ஐயம்மா வர மாட்டாங்ளா" என்று அழத்துவங்கினேன்....