வித்யாஸ்தானம் பள்ளியின் ஒன்பதாவது ஆண்டு விழா

Imageபாரதிய இசை. கலாச்சாரம் மற்றும் மொழிகளைப் பயிற்றுவிக்கும் பள்ளியான வித்யாஸ்தானத்தின் ஒன்பதாவது ஆண்டு விழா இணையதளம் மூலமாக மே மாதம் 26ம் தேதியன்று நடைபெற்றது.

திரு. வணங்காமுடி வள்ளுவதாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

இந்தப் பள்ளியானது முனைவர் திருமதி ரா. சரஸ்வதி சாய்நாத்தால் 2015ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து சம்ஸ்க்ருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கனடாவில் வசித்து வருகிறார்.

தமிழ், சம்ஸ்க்ருதம், ஆங்கிலம், இந்தி மற்றும் பிரஞ்ச் மொழிகளை அறிந்த இவர் முதன் முதலாக ஒரே ஒரு மாணவருக்குச் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து வீணை, கர்நாடக இசை, சம்ஸ்க்ருதம், பிரஞ்ச், பகவத்கீதை போன்ற வகுப்புகளை இந்தியா மற்றும் கனடாவில் வசிக்கும் மாணவர்களுக்காக நேரிலும் இணையதளம் மூலமாகவும் நடத்துகிறார்.

ஞாயிறன்று நடந்த இப்பள்ளியின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் விநாயகர் அகவல், பன்னிரு திருமுறை, தோடகாஷ்டகம், காலபைரவாஷ்டகம், லிங்காஷ்டகம், மார்க்கபந்துஸ்தோத்ரம், முதலியவைகளைக் கூறியதுடன் மட்டுமன்றி கற்பூரநாயகி, மாணிக்க வீணையேந்தும் போன்ற பாடல்களையும் பாடி, வாதாபி கணபதிம் போன்ற கீர்த்தனைகளை வீணையிலும் வாசித்தார்கள்.

சம்ஸ்க்ருத மொழியில் 1முதல் 100 எண்கள், ரகுவம்ச ஸ்லோகங்கள், உபமா அலங்காரம், பகவத்கீதை ஸ்லோகங்கள் முதலியவைகளைக் கூறி விளக்கங்களும் கொடுத்தார்கள். நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக உயிர் தமிழ் அரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டவர்கள் ஆங்கில சொற்கள் கலக்காமல் தமிழில் உரையாடினார்கள். முனிவர் பதஞ்ஜலி, சத்தியத்தின் பெருமைகளைப் பற்றிய கதைகளைக் குழந்தைகள் அழகாய் தமிழில் கூறினார்கள்.

இந்த உயிர் தமிழ் அரங்கத்தில் கலந்துக்கொண்டவர்கள் கனடாவின் மாண்ட்ரியல் மற்றும் டொரண்டோ நகரில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புராதனமான தமிழ் மொழியைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை. தமிழைக் காக்க தவறினால் நாம் நம் வரலாற்றையே இழக்க நேரிடும்.

சம்ஸ்க்ருத மொழி தெரிந்ததால் தன்னால் மற்ற இந்திய மொழிகளையும் ஐரோப்பிய மொழியான குறிப்பாக பிரஞ்ச் மொழியையும் எளிதாகக் கற்க முடிந்தது. நம் நாட்டின் செம்மொழிகளான சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுமே பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்படவேண்டிய மொழிகள் என்று வித்யாஸ்தானம் பள்ளியின் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான முனைவர் திருமதி ரா. சரஸ்வதி சாய்நாத் கூறினார்.