மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்

Image

இந்த பிரபஞ்பசத்தில் மாற்றமே நிரந்தரமானது. உலகமும் உலகில் வாழும் ஜீவராசிகளும் அதன் உடல் மன தேவைகளுக்கேற்ப மாறிக்கொண்டேதான் வந்துள்ளது. இதைதான் பரிணாமம் என்று சொல்கிறோம். எனவே நம்மை சுற்றி மனிதர்களில் நிகழ்வுகளில், நாகரிகங்களில், அறிவியலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருப்பார்கள். எங்கு பார்த்தாலும் சுத்தமே இல்லை. ஒரே பொல்யுஷன். கலப்படம். யாரை பார்த்தாலும் நோயோடு இருக்கிறார்கள். காற்று, உணவு எதுவுமே சுத்தமாயில்லை. மக்களெல்லாம் சுயநலமா இருக்காங்க. எங்க பார்த்தாலும் கொலை, கற்பழிப்பு, திருட்டு, வாகன விபத்துன்னு, பேப்பர் படிக்கவே பிடிக்கல.

அரசியனாலே ஊழல் தான் என்றெல்லாம் புலம்புவார்கள். இப்புலம்பல்களை நாம் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது ஒரு புறம். மற்றொரு புறம் பார்ப்போம். மருத்துவத் துறை வளர்ச்சியினாலே எத்தனையோ நோய்களை நாம் ஓழித்து இருக்கிறோம். போலியோ, அம்மை போன்ற வாழ்க்கை தரத்தையே குலைக்கக் கூடிய நோய்களை நாம் ஓழித்து இருக்கிறோம்.

எத்தனையோ கடுமையான நோய்களுக்கு சுலபமான தீர்வுகளை கொண்டு வந்துள்ளோம். ஐம்பது வருடங்களுக்கு முன்பு 60-70 வயதுகளில் முடங்கி வீட்டிலேயே இருந்த பெரியவர்கள் இன்று எண்பது வயதுகளிலும் தனியே போய் வருவதையும் தன் தோற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதையும் பார்க்கிறோம். செயலிழந்த முக்கிய உறுப்புகளைக் கூட மாற்றிக் கொண்டு தரமான வாழ்க்கை நடத்துவதை பார்க்கிறோம்.

ஜனத்தொகை கூடும் விதத்திற்கேற்ப குற்றங்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது என்று சொல்ல முடியாது. ஊடகங்களின் வளர்ச்சி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவி இருப்பதால் எந்த ஒரு குற்றமும் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. அவ்வளவுதான். இன்றைய நவீன பாதுகாப்பு அம்சம்களால் வாகன விபத்துகள் கூட பெருமளவில் குறைந்து உள்ளது.

இதே போல் பெண்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி, பிரபஞ்பச ரகசியங்களை விஞ்ஞானத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளச் செய்யும் ஆராய்ச்சிகள், மனித வாழ்க்கையை சுலபமாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கியுள்ள பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் போன்றவைகளை குறிப்பிடலாம். இவையெல்லாம் பாராட்டப்படவேண்டிய இந்நுற்றாண்டு நல்லவைகள்.

மேலும், இயற்கை சீற்றங்களின் போது அதிகமாய் வந்து குவியும் நன்கொடைகள், கொலை குற்றவாளிக்கும் மரண தண்டனை கூடாது என போராடும் மக்களின் கருணை, மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து குரல் கொடுக்க ஓடி வரும் மக்கள் நல இயக்கங்கள், சான்மான்ய மக்கள் கூட ஆன்மீக சிந்தனைகளில் ஆர்வம் காட்டுவது, இவையெல்லாம் மக்கள் மனதில் அன்பு, கருணை, இறைஉணர்வு எல்லாம் நிரம்பி இருப்பதையே காட்டுகிறது.

எனவே நம்மை சுற்றி நடக்கும் நல்லவைகளை வரவேற்கவும், பாராட்டவும் கற்றுக் கொள்ள வேண்டும். குறைகளை பெரிது படுத்தி புலம்பாமல் இருக்க பழக வேண்டும்.

Image

M.Vimalatharani M.sc(couns&psyc),MD(acu),DHBM

psychotherapist